290 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
குருவராஜபாளையம் ஊராட்சியில் நடந்த சிறப்பு மனுநீதிநாள் முகாமில் 290 பயனாளிகளுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
குருவராஜபாளையம் ஊராட்சியில் நடந்த சிறப்பு மனுநீதிநாள் முகாமில் 290 பயனாளிகளுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
நலத்திட்ட உதவி
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியம், குருவராஜ பாளையம் ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி வரவேற்று பேசினார். ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, அணைக்கட்டு ஒன்றியக்குழு தலைவர் சி.பாஸ்கரன், குருவராஜ பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி நீலமேக ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீராபென் காந்தி ஆகியோர் திட்ட வளக்க உரையாற்றினர்.
மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி 290 பயனாளிகளுக்கு ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 49 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 85 பேருக்கு வீட்டுமனை பட்டா, 40 பேருக்கு குடும்ப அட்டை இரண்டு பேருக்கு சலவை பெட்டி, விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கி பேசினார்.
படிக்கவைக்க வேண்டும்
அப்போது கிராமப்பகுதிகளில் பெண்களை அவசியம் படிக்க வைக்க வேண்டும். தமிழக அரசு பெண்களுக்காக அதிக சலுகைகள் வழங்கி வருகிறது. மேலும் விரைவில் அனைத்து ஆரம்ப பள்ளிகளிலும் காலை உணவு வழங்க உள்ளது. ஆகவே குழந்தைகளை பெற்றோர்கள் அவசியம் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்றார்.
முன்னதாக பொது மருத்துவ முகாம் மற்றும் விவசாய கண்காட்சியை கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். முடிவில் அணைக்கட்டு தாசில்தார் ரமேஷ் நன்றி கூறினார்.