ஜமாபந்தியில் 23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ஊட்டியில் நடந்த ஜமாபந்தியில் 23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

Update: 2022-06-29 13:59 GMT

ஊட்டி, 

ஊட்டியில் நடந்த ஜமாபந்தியில் 23 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

பதிவேடுகளை ஆய்வு செய்தார்

நீலகிரி மாவட்டம் ஊட்டி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி, 12 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகள், 11 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான உத்தரவு என மொத்தம் 23 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 72 மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

அந்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். இதையடுத்து கலெக்டர் அம்ரித் தூனேரி உள்வட்டத்திற்கு உட்பட்ட தூனேரி, தும்மனட்டி, எப்பநாடு, கூக்கல், கக்குச்சி ஆகிய கிராமங்களின் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் ஊட்டி தாசில்தார் ராஜசேகரன், வட்ட வழங்கல் அலுவலர் சங்கர் கணேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ஜாதி, மதம் அற்றவர் சான்று

கோத்தகிரியில் குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி தலைமையில் ஜமாபந்தி நேற்று நடந்தது. இதில் கோத்தகிரி அருகே குமரன் காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாலகிருஷ்ணன், தனது மகன் மருதுபாண்டி, மகள் தஸ்லிமா ஆகிய இருவருக்கும் ஜாதி சான்றிதழுக்கு பதிலாக ஜாதி, மதம் அற்றவர் சான்று வழங்க மனு அளித்தார். இந்த மனு பரிசீலிக்கப்பட்டடு, 2 பேருக்கும் ஜாதி, மதம் அற்றவர் என்ற சான்றை சப்-கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

பந்தலூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் சேரங்கோடு, எருமாடு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வீட்டு மனைப்பட்டா, தடுப்புச்சுவர் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 58 மனுக்களை அளித்தனர். இதில் தாசில்தார் நடேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், பிதிர்காடு உதவி வன பாதுகாவலர் கிருபாகரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் குன்னூர், கூடலூர், குந்தா தாலுகாக்களில் ஜமாபந்தி நடந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்