208 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கல்வராயன்மலையில் 208 பயனாளிகளுக்கு ரூ.56 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷ்ரவன்குமார், எம்.எல்.ஏ.உதயசூரியன் ஆகியோர் வழங்கினர்

Update: 2022-11-30 18:45 GMT

கச்சிராயப்பாளையம்

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேராப்பட்டு கிராமத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் முன்னிலை வகித்தார்.

விழாவில் 208 பயனாளிகளுக்கு ரூ.56 லட்சத்து 18 ஆயிரத்து 14 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர். பின்னர் கலெக்டர் ஷ்ரவன்குமார் பேசியதாவது:-

82 பேருக்கு மனைப்பட்டா

இந்த விழாவில் கூட்டுறவுத்துறை சார்பில் 27 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 22 ஆயிரத்து 500 கடன், பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான ஆணை, பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 73 பயனாளிகளுக்கு ரூ.37 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவி, தோட்டக்கலைத்துறையின் சார்பில் 22 பயனாளிகளுக்கு ரூ.4 லட்சத்து 62 ஆயிரத்து 14 மதிப்பில் வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல் வருவாய்த்துறை சார்பில் 82 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 23 ஆயிரத்து 500 மதிப்பில் வீட்டு மனைப்பட்டா, 4 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை என மொத்தம் 208 பயனாளிகளுக்கு ரூ.56 லட்சத்து 18 ஆயிரத்து 14 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

வளர்ச்சி திட்ட பணிகள்

மேலும், கல்வராயன்மலைப்பகுதியில் மலைவாழ் மக்களுக்குத் தேவையான அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளும் உடனுக்குடன் வழங்கிட அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இங்கு நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சி திட்ட பணிகளும் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் கல்வராயன்மலை ஒன்றியக்குழு தலைவர் சந்திரன், இணை பதிவாளர்(கூட்டுறவு சங்கங்கள்) மீனா அருள், மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கதிர்சங்கர், கல்வராயன்மலை தாசில்தார் சையது காதர், தனி தாசில்தார் குமரன், ஆவின் தலைவர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், சேராப்பட்டு ஊராட்சிமன்ற தலைவர்கள் கல்யானிகிருஷ்னன், குப்புசாமி ரத்தினம், சாரதா சின்னையன் சின்னக்கன்னு செல்வம், மாவட்ட கவுன்சிலர் அலமேலு சின்னசாமி மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்