154 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கோத்தகிரி அருகே நெடுகுளாவில் நடந்த மனுநீதி நாள் முகாமில், 154 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

Update: 2022-10-18 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி அருகே நெடுகுளாவில் நடந்த மனுநீதி நாள் முகாமில், 154 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

அனுபோக சான்று

கோத்தகிரி தாலூகாவிற்கு உட்பட்ட நெடுகுளா கிராமத்தில் மனு நீதிநாள் முகாம் நேற்று நடைபெற்றது. முகாமுக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:- விவசாயிகள் பல்வேறு சலுகைகள் மற்றும் வங்கிக்கடன் பெறுவதற்காக வருவாய்த்துறை மூலம் அனுபோக சான்று பெறுகின்றனர். இதனை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வந்தது.

ஆனால், விவசாயிகள் நலன் கருதி தற்போது அனுபோக சான்றை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதுமானது என நடைமுறை படுத்தப்பட்டு உள்ளது. தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் நீலகிரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

இதனைத் தொடர்ந்து விதவை, முதிர்கன்னி மற்றும் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவி, கல்விக்கடன், தனிநபர் கடன் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன், புதுமை பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கான உதவித்தொகை, புதிய ரேஷன் அட்டை மற்றும் மருத்துவ காப்பீட்டு அட்டைகள், பெண்களுக்கு தையல் எந்திரங்கள், கால்நடைத்துறை சார்பில் விலையில்லா ஆடுகள், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் உயிர்காக்கும் மருந்துகள், தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகளுக்கு உபகரணங்கள் என மொத்தம் 154 பயனாளிகளுக்கு ரூ.66 லட்சத்து 19 ஆயிரத்து 700 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

முகாமில் தனி துணை ஆட்சியர் முருகன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா, மாவட்ட ஊராட்சி தலைவர் பொந்தோஸ், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய தலைவர் ராம்குமார், நெடுகுளா ஊராட்சி தலைவர் சுகுணாசிவா, தாசில்தார் காயத்ரி மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்