மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருப்பத்தூரில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

Update: 2023-03-06 18:45 GMT

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள், குடிநீர் வசதி உள்ளிட்ட 403 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

பின்னர் கடந்த வாரம் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில், 120 கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. அதனடிப்படையில் வருவாய்த்துறை சார்பில் 32 திருநங்கைகளுக்கும், 6 பேருக்கும் இலவச வீட்டுமனை பட்டாக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம், பழங்குடியினர் நலவாரிய அட்டைகள், ஒரு குழந்தைக்கு பிறப்பு சான்று, 2 பேருக்கு விதவை சான்று, தென்னை நாற்றுப் பண்ணை அமைத்திட ஒரு நபருக்கு மானிய நிதியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலை என மொத்தம் 63 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கி பேசினார்.

நலத்திட்ட உதவிகள்

மேலும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்களை பெற்ற கலெக்டர் உடனடியாக 3 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள், 2 பேருக்கு ஊன்றுகோல் வழங்கினார். மேலும் 11 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, வேளாண்மை இணை இயக்குநர் பாலா, உதவி இயக்குநர் ஊராட்சிகள் விஜயகுமாரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரேவதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்திய பல் மருத்துவர் சங்கம் சார்பில் பல் மருத்துவ தினத்தையொட்டி நடந்த பல் மருத்துவ முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார். இதில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்