1 லட்சம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள்

மதுரையில் 1 லட்சம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

Update: 2023-01-27 19:19 GMT

மதுரையில் 1 லட்சம் பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 6-ந் தேதி நடக்கிறது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

நலத்திட்ட உதவிகள்

தமிழக விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றவுடன் உதயநிதி ஸ்டாலின், கடந்த 16-ந் தேதி மதுரை வந்தார். அவர் 17-ந் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்து அதில் பங்கேற்றார். இதன் தொடர்ச்சியாக உதயநிதி ஸ்டாலின், அடுத்த மாதம் 6-ந் தேதி மதுரை வருகிறார். இங்கு வண்டியூரில் உள்ள கலைஞர் திடலில், 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. அந்த விழாவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் மூர்த்தி முன்னின்று செய்து வருகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கான கால்கோள் விழா, அமைச்சர் மூர்த்தி தலைமையில் நேற்று காலை நடந்தது. அதன் தொடர்ச்சியாக, மதுரையில் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பான தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில் மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ., மணிமாறன் ஆகியோர் தலைமை தாங்கினர். அதில் முன்னாள் பொன்.முத்துராமலிங்கம், வெங்கடேசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு

இந்த கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:- மதுரை தி.மு.க. என்பது 3 மாவட்டமாக இருந்தாலும், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து எழுச்சியோடு செயல்பட்டு வருகிறோம். இது கட்சி தலைவருக்கு பெருமை சேர்க்கும் விஷயம். அரசு விழாவில் 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, இதுவரை மதுரை கண்டிராத ஒன்று. தென்மாவட்டத்திலேயே இது மிகப்பெரும் அரசு நிகழ்ச்சியாக இருக்கும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் யாரை நிறுத்தினாலும் அவரை வெற்றி பெற வைப்போம். தி.மு.க.வின் நாடாளுமன்ற வெற்றிக்கு, மதுரை வெற்றிதான் அடித்தளமாக அமையும் என்றார்.

கோ.தளபதி எம்.எல்.ஏ. பேசும்போது, மதுரையில் முதல் முறையாக 1 லட்சம் பேருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

எனவே அமைச்சர் உதயநிதிக்கு, மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்க வேண்டும். அதில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்