மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
நாமக்கல்லில் நேற்று தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 33 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ராஜேஸ்குமார் எம்.பி. வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை தாங்கினார். ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ., நகரமைப்பு மண்டல திட்ட குழு உறுப்பினர் மதுரா செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 33 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.97 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதி 2022-23 மற்றும் 2023-24-ன் கீழ் ரூ.16.95 லட்சம் மதிப்பில் 18 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மற்றும் ரூ1 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பில் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலி என மொத்தம் 33 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.17.97 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நற்சான்றிதழ்கள்
தொடர்ந்து, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்ட ஆண்டு விழாவையொட்டி, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்று பயனடைந்த 5 பேருக்கு ராஜேஸ்குமார் எம்.பி. பரிசு வழங்கினார்.
மேலும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் மூலம் சிறப்பாக சிகிச்சை மேற்கொண்ட 2 அரசு மருத்துவமனைகள், 2 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 4 மருத்துவமனைகளை பாராட்டி, நற்சான்றிதழ்களை வழங்கினார். முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் செயல்படும் 4 அரசு மருத்துவமனைகள் மற்றும் 3 தனியார் மருத்துவமனைகளில் சிறப்பாக பணியாற்றிய 7 ஊழியர்களை பாராட்டி, நற்சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
ரூ.2.83 கோடிக்கு சிகிச்சை
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 9 அரசு மருத்துவமனைகளில் 2,312 பேருக்கு ரூ.2 கோடியே 2 லட்சம் மதிப்பிலும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை 3,422 பேருக்கு ரூ.2.83 கோடி மதிப்பிலும் சிகிச்சை வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, நகராட்சி கவுன்சிலர் சிவக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் சுமன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரபாகரன், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் (பொறுப்பு) மகிழ்நன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.