இலங்கையில் இருந்து கப்பலில் நாகை வந்த பயணிகளுக்கு வரவேற்பு
இலங்கையில் இருந்து கப்பலில் நாகை வந்த பயணிகளுக்கு துறைமுக அதிகாரிகள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
இலங்கையில் இருந்து கப்பலில் நாகை வந்த பயணிகளுக்கு துறைமுக அதிகாரிகள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
நாகை வந்த பயணிகளுக்கு வரவேற்பு
இலங்கையில் இருந்து பயணிகள் கப்பல் நேற்று மாலை 5.15 மணி அளவில் நாகை வந்தது. கப்பலில் வந்த இலங்கை பயணிகளுக்கு மாநில துறைமுக அலுவலர் அன்பரசன், நாகை துறைமுக அலுவலர் மானேக்ஷா மற்றும் அலுவலர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
இந்தியா வந்த மகிழ்ச்சியில் கப்பலில் இறங்கிய இளைஞர்கள் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து இலங்கை பயணிகளுக்கு முறைப்படி பாஸ்போர்ட், மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டது.
கலெக்டர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழக துணை மேலாளர்(வணிகம்) சிதம்பர குமார் தலைமையில் 2 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கப்பலில் வந்திறங்கிய பயணிகள் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்னர் பஸ்களில் ஏறி பயணம் செய்தனர்.
இலங்கையில் இருந்து கப்பல் மூலம் நாகை வந்த பயணிகள் கூறியதாவது:-
ஆன்லைனில் விசா
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிவக்குமார்:- நான் சிவபெருமானின் தொண்டன். தமிழகத்தில் ஏராளமான சிவாலயங்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக நாகை மாவட்டங்களிலும், திருவாரூர் தியாகராஜர் கோவில் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி 200-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
இந்த கப்பல் போக்குவரத்து மூலம் அடிக்கடி இந்த பகுதிகளுக்கு வந்து செல்வேன். முதலில் நான் மட்டும் இங்கு வந்துள்ளேன். பின்னர் எனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு வருவேன்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுதர்சன்:- நான் தமிழகத்துக்கு பலமுறை விமானம் மூலம் வந்திருக்கிறேன். முதல் முறையாக கப்பலில் வந்துள்ளேன். கப்பல் பயணம் நன்றாக இருந்தது. 5 நாட்கள் சென்னையில் தங்கி விட்டு பின்னர் சொந்த ஊருக்கு திரும்ப திட்டமிட்டு உள்ளேன். ஆன்லைனில் விசா வழங்கும் நடைமுறையை அமல்படுத்தினால் கப்பல் போக்குவரத்து இன்னும் எளிமையாக இருக்கும்.
சுவாரசியமாக உள்ளது
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ரஞசனி:- திருநெல்வேலியில் உள்ள முகாமில் இருக்கும் எனது உறவினர்களை பார்ப்பதற்காக வந்து உள்ளேன். நாகப்பட்டினத்தில் இருந்து திருநெல்வேலிக்கு சரியான போக்குவரத்து வசதி இல்லை என்பது இங்கு வந்த பிறகுதான் தெரிகிறது. கப்பல் பயணம் சுவாரசியமாக இருந்தது. மீண்டும் மதுரையில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் செல்ல திட்டமிட்டுள்ளேன்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தவக்காரன்:- தமிழகத்தில் நிறைய இடங்களை சுற்றி பார்க்க வேண்டும் என்பது எனது விருப்பம். அதுவும் பயணிகள் கப்பலில் சுற்றி பார்ப்பதற்காக வந்திருப்பதை வித்தியாசமான அனுபவமாக பார்க்கிறேன். தமிழகத்தின் முக்கியமான இடங்களை தேர்வு செய்து வைத்துள்ளேன்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.