நடைபயண பிரசார குழுவினருக்கு வரவேற்பு
வடமதுரையில் இந்திய தொழிற்சங்க மையத்தின் சார்பில் நடைபயண பிரசார குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யூ.) சார்பில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும், தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் இருந்து திருச்சி நோக்கி நடைபயண பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 20-ந்தேதி தொடங்கப்பட்ட இந்த பிரசார குழுவினர் நேற்று திண்டுக்கல் மாவட்டம் வடமதுரைக்கு வந்தனர். அங்கு அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வடமதுரையில் வரவேற்பு பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு இந்திய தொழிற்சங்க மையத்தின் வடமதுரை பொறுப்பாளர் ராஜூ தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.பாலபாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் இந்திய தொழிற்சங்க மையத்தின் மாநில செயலாளர்கள் ராஜேந்திரன், தேவா, மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட செயலாளர் பிரபாகரன், முன்னாள் கவுன்சிலர் சம்சுதீன், அங்கன்வாடி ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் செல்வதனபாக்கியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வடமதுரை பேரூராட்சி துணைத்தலைவர் மலைச்சாமி வரவேற்றார். முடிவில் மாவட்டக்குழு உறுப்பினர் பாலச்சந்திர போஸ் நன்றி கூறினார்