அரியலூர் வந்த ஆக்கி வீரருக்கு வரவேற்பு
அரியலூர் வந்த ஆக்கி வீரருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரியலூர்
இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஆக்கி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற முதல் போட்டியில் முதல் கோலை அரியலூர் வீரர் கார்த்தி பதிவு செய்தார். ஜப்பான், இந்தோனேஷியாவுடன் இந்திய அணி சார்பில் சூப்பர் 4-ல் விளையாடி வெண்கல பதக்கத்தை வென்றது. பதக்கத்துடன் சொந்த ஊரான அரியலூருக்கு வருகை தந்த ஆக்கி வீரர் கார்த்தியை அவரது நண்பர்கள், மாவட்ட ஆக்கி கழகத்தினர் வரவேற்பு அளித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஆக்கி வீரர் கார்த்தி கூறும்போது, அடுத்து ஒலிம்பிக் போட்டி மற்றும் எதிர்வரும் 10 ஆண்டுகள் இந்திய அணியில் விளையாட ஆசைப்படுகிறேன். அரியலூரில் இருந்து சென்று இந்திய அணிக்கு விளையாடியது பெருமையாக உள்ளது. அரியலூர் விளையாட்டு அரங்கில் ஆக்கி பயிற்சி வீரர்களுக்கு என விரைவில் செயற்கை புல்தரை மைதானம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். மேலும் ஒலிம்பிக்கில் தேர்வாகி இந்தியாவிற்கு பதக்கங்கள் வெல்லவேண்டும் என்பதே தனது அடுத்த லட்சியம் என தெரிவித்தார்.
இதையடுத்து ஆக்கி சங்க நிர்வாகிகள் கூறும்போது, அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக்கி செயற்கை புல்தரை அமைப்பதற்கான உத்தரவை ஏற்கனவே அறிவித்துள்ளார். அதற்கு ஆக்கி கழகம் சார்பில் நன்றியை தெரிவிப்பதாகவும், அறிவிக்கப்பட்ட பணியை விரைந்து முடிக்க கோரிக்கை வைப்பதாகவும் தெரிவித்தனர்.