7 இடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு ஏற்பாடு

ஜோலார்பேட்டை ஒன்றிய, நகர பகுதியில்7 இடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-26 17:27 GMT

திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக திறப்பு விழா வருகிற 29-ந் தேதி நடக்கிறது. கலெக்டர் அலுவலகத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, 7,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். அவருக்கு திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் சார்பில் மாவட்டம் முழுவதும் உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்தநிலையில் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜோலார்பேட்டை ஒன்றிய, நகர சார்பில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 7 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டு அதற்கான இடம் தேர்வு குறித்து மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி, திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

நகர தி.மு.க. சார்பில் சந்தை கோடியூர் பகுதியில் வரவேற்பளிக்க திட்டமிட்டு விழா மேடை அமைப்பதற்கான பணி தொடங்கப்பட உள்ளது. மேலும் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டு இடம் தேர்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வில் நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், ஒன்றியக்குழு தலைவர்கள், துணைத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள தொன்போஸ்கோ பள்ளி மைதானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ள விழா மேடையை தேவராஜ், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர் சூரியகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்