முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வீரபாண்டி
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு மே 9-ந் தேதி வெளியிடப்பட்டது. ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு, கல்லூரி இணையதள முகவரியில் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. சிறப்பு ஒதுக்கீடு, விளையாட்டு பிரிவு, மாணவ, மாணவிகளுக்கு மூன்று கட்டமாக கவுன்சிலிங் கடந்த மாதம் நடத்தப்பட்டது. கவுன்சிலிங் பணிகள், 90 சதவீதம் முடிந்துள்ள நிலையில், கல்லூரி திறக்கப்பட்டு, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில்பி.எஸ்சி. கணித பாடப்பிரிவில் 35 இடங்கள் உள்பட 47 இடங்களும், எல்.ஆர்.ஜி., கல்லூரியில் மொத்தம் 10 இடங்களும் இதுவரை நிரப்பப்படாமல் உள்ளன. இந்த இடங்கள் இறுதிகட்ட கவுன்சிலிங் அல்லது அரசின் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட உள்ளது. இந்நிலையில் பள்ளி படிப்பு முடித்து விட்டு, முதன் முதலில் கல்லூரிக்கு நேற்று வந்த மாணவ, மாணவிகளுக்கு சிக்கண்ணா மற்றும் எல்.ஆர்.ஜி. அரசு கல்லூரி நிர்வாகங்கள் தரப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. எல்.ஆர்.ஜி கல்லூரி சார்பில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் எழிலி மற்றும் பேராசிரியைகள் முன்னிலையில், சீனியர் மாணவிகள் இனிப்புகள், பூக்கள், குங்குமம் கொடுத்து வரவேற்று கல்லூரிக்குள் அழைத்து சென்றனர்.