புலம்பெயர் தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு வரவேற்பு

Update: 2022-12-24 16:57 GMT


புலம்பெயர் தமிழர் நல வாரிய தலைவராக பொறுப்பேற்று காங்கயம் வந்த கார்த்திகேய சிவசேனாபதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பு

புலம்பெயர் தமிழர் நல வாரிய தலைவராக பொறுப்பேற்று காங்கயம் வந்த கார்த்திகேய சிவசேனாபதிக்கு, தி.மு.க முன்னாள் ஒன்றிய செயலாளர் என்.எஸ்.சிதம்பரம் தலைமையில், நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும், மேளதாளங்கள் முழங்க, ஆளுயர மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தி.மு.க நிர்வாகிகளுடன் கார்த்திகேய சிவசேனாபதி காங்கயம் பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

இதில் மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் நாராயணமூர்த்தி, அருண், மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் ஜவஹர், ஈரோடு மாவட்ட சுற்றுசூழல் அணி அமைப்பாளர் எல்லப்பாளையம் சிவக்குமார், காங்கயம் தி.மு.க முன்னாள் நகர செயலாளர் செந்தில்குமார், கீரனூர் ஊராட்சி தலைவர் ஈஸ்வரமூர்த்தி, நத்தக்கடையூர் ஊராட்சி தலைவர் செந்தில்குமார் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், திராவிடர் கழக நிர்வாகிகள் உட்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் கார்த்திகேய சிவசேனாபதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் வாழ்த்து

தமிழகத்தில் முதன் முறையாக புலம்பெயர்ந்த தமிழர்களின் நல வாரியத்தை தமிழக முதல்-அமைச்சர் உருவாக்கியுள்ளார். அந்த வாரியத்தின் முதல் தலைவராக என்னை நியமித்ததை அடுத்து முதல்-அமைச்சரை சந்தித்து அவருடைய வாழ்த்துக்களை பெற்றேன்.

கீழ்பாவனி வாய்க்கால் பிரச்சினை கடந்த 12 வருட காலமாக இருந்து வருகிறது. ஜெயலலிதா ஆட்சியில் இந்த திட்டத்தை கைவிட்டு விட்டோம் என்ற உத்தரவாதத்திற்கு பிறகு விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அதற்கு பிறகு விவசாயிகளுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்தது எடப்பாடி பழனிசாமி ஆட்சி.

முயற்சி எடுக்கப்படும்

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, இந்த வாய்க்கால் திட்டத்திலே அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்கிறார். அவர்களுடைய விவசாய அணி அமைப்பாளர் சொல்கிறார் இந்த வாய்க்கால் திட்டத்தை ஆய்வு செய்து திட்டத்தை கைவிடுவதா இல்லை, இந்த திட்டத்தை அமல்படுத்துவதா என்று முடிவு செய்ய சொல்கிறார். எந்த ஒரு தெளிவும் இல்லாமல் மக்களை ஏமாற்றி குழப்பம் செய்யக்கூடிய அரசியலை பா.ஜ.க செய்து வருகிறது. இன்னும் வேடிக்கை என்னவென்று பார்த்தால் அ.தி.மு.க சேர்ந்தவர்கள் இப்போது இந்த திட்டத்தை கைவிட கோரி நாங்கள் நடத்த கூடிய இந்த போராட்டத்திற்கு அவர்களும் வந்து இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்கிறார்கள். இந்த திட்டத்தை தொடர்ந்து விவசாயிகள் எதிர்த்து வருகிறார்கள். இதனை முதல்-அமைச்சரிடமும், தலைமை செயலாளரிடமும் எடுத்து சொல்லியிருகிறோம். நிச்சயமாக இந்த திட்டத்தை கைவிடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

---

மேலும் செய்திகள்