எடை நிலைய ஊழியர்கள்-லாரி டிரைவர்கள் திடீர் மோதல்

தூத்துக்குடியில் எடை நிலைய ஊழியர்கள், லாரி டிரைவர்கள் திடீரென்று மோதிக் கொண்டனர். மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-14 18:45 GMT

தூத்துக்குடியில் எடை நிலைய ஊழியர்கள், லாரி டிரைவர்கள் திடீரென்று மோதிக் கொண்டனர். மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

லாரி டிரைவர்

தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் பேச்சிகுட்டிமுத்து (வயது 25). லாரி டிரைவரான இவர் துறைமுகத்தில் இருந்து மேலமருதூரில் உள்ள தனியார் அனல்மின் நிலையத்துக்கு லாரியில் நிலக்கரி ஏற்றி செல்வது வழக்கம்.

அவ்வாறு செல்லும் போது, துறைமுக ரோட்டில் உள்ள ஒரு எடை நிலையத்தில் காலி லாரியையும் மற்றும் நிலக்கரி ஏற்றிய பிறகும் எடை போடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்

தகராறு

கடந்த சில நாட்களுக்கு முன்பு பேச்சிகுட்டிமுத்து காலி லாரியை எடைபோட சென்ற போது, தாமதமானதாக கூறப்படுகிறது. இதனால் எடை நிலைய மேலாளர் காஜாபாய் என்பவருடன் தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மீண்டும் பேச்சிகுட்டிமுத்து எடை போட சென்ற போது, எடைநிலைய ஊழியர்கள் சிலர் சேர்ந்து பேச்சிகுட்டிமுத்துவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

மோட்டார் சைக்கிள் எரிப்பு

அப்போது, அங்கு இருந்த சில லாரி டிரைவர்கள் பேச்சிகுட்டிமுத்துவுக்கு ஆதரவாக செயல்பட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லாரி டிரைவர்களான பேச்சிகுட்டிமுத்து, பாரத் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த எடை நிலைய ஊழியர் டிக்சன் என்பவரின் மோட்டார் சைக்கிளை தீவைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிள் எரிந்து சேதம் அடைந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

12 பேர் மீது வழக்கு

இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் தெர்மல்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இருதரப்பை சேர்ந்த காஜாபாய், பாரத், பேச்சிகுட்டிமுத்து உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் காரணமாக தூத்துக்குடி துறைமுகசாலையில் லாரிகள் அணிவகுத்து நின்றன.

Tags:    

மேலும் செய்திகள்