வீரவசந்தராயர் மண்டப திருப்பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவடையும்-ஆய்வுக்குப்பின் அமைச்சர் சேகர்பாபு தகவல்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டப திருப்பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவடையும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டப திருப்பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவடையும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
வீரவசந்தராயர் மண்டபம்
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது.
இதில் கோவிலின் கிழக்கு வாசல் ராஜகோபுரம் வழியாக சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் உள்ள வீரவசந்தராயர் மண்டபம் எரிந்து சேதம் அடைந்தது. அப்போதில் இருந்து கிழக்கு ராஜகோபுரம் மூடப்பட்டு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் விபத்து நடந்த பகுதியை பழமை மாறாமல் ஆகம விதிப்படி புனரமைக்க கோவில் நிர்வாகமும், அரசும் முடிவு செய்தது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பாலக்கோடு அருகே உள்ள பட்டினம் மலை அடிவாரத்தில் உள்ள கற்களை புனரமைப்பு பணிக்கு பயன்படுத்த அரசு முடிவு செய்தது. அதன்படி அங்கு கற்கள் வெட்டி எடுக்க ரூ.6.40 கோடி, மண்டப வடிவமைப்புக்கு ரூ.11.70 கோடிைய அரசு ஒதுக்கீடு செய்தது.
அங்கு கடந்தாண்டு முதல் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான மதுரை வலையங்குளத்தில் உள்ள கூடல்செங்குளம் பண்ணையில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த கற்களை தூண்களாக செதுக்கும் பணியை திருப்பூர் ஸ்தபதி வேல்முருகன் என்பவருக்கு அரசு வழங்கியது. இந்த நிலையில் வீரவசந்தராயர் மண்டப புனரமைப்பு பணிகளுக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் சமீபத்தில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
இந்த பணிகளை ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று மதுரை வந்தார். அவர் கூடல்செங்குளத்தில் வைக்கப்பட்டு இருக்கும் கற்களையும், அங்கு நடைபெறும் பணிகளையும் பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த அவரையும், அமைச்சர் மூர்த்தியையும், கோவில் தக்கார் கருமுத்துகண்ணன் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். பின்னர் வீரவசந்தராயர் மண்டபம் பகுதிக்கு சென்று அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
பணிகளை முடிக்கும் காலம் குறித்து கோவில் அதிகாரிகளிடம் சேகர்பாபு கேட்டறிந்தார். பின்னர் 2 வாரத்திற்கு ஒரு முறை தக்கார் மற்றும் அறநிலையத்துறை மதுரை மண்டல இணை கமிஷனர், கோவில் துணை கமிஷனர் ஆகியோர் கூட்டம் நடத்தி பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இது தொடர்பான அறிக்கையும் அளிக்க வேண்டும். இதன் மூலம் புனரமைப்பு பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்க முடியும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார். கோவிலில் பக்தர்களுக்கான பேட்டரி கார் வசதியையும் அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
புதுமண்டபத்தில் ஆய்வு
பின்னர் புதுமண்டபத்திற்கு சென்று வசந்த உற்சவ மண்டபத்தை ஆய்வு செய்தார். மண்டபத்தை சுற்றி சிறிய அகழியில் தண்ணீர் நிரப்புவது குறித்து கேட்டறிந்தார். உடனே தக்கார் கருமுத்துக்கண்ணன், பழைய முறைப்படி தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார். உடனே அமைச்சர், அடுத்த திருவிழாவுக்குள் அகழியில் தண்ணீர் நிரப்ப தேைவயான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
மேலும் அங்குள்ள சிலைகளை பார்வையிட்ட போது, அதில் சில சிலைகள் சேதம் அடைந்திருப்பதை கண்டார். அந்த சிலைகளையும் சீரமைத்து புதுமண்டபத்தையும் புனரமைக்கும்படி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
ஆய்வின்போது, கலெக்டர் அனீஸ்சேகர், எம்.பி. வெங்கடேசன், எம்.எல்.ஏ.க்கள் தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், செயலாளர் சந்திரமோகன், மண்டல இணைகமிஷனர் செல்லத்துரை, துணை கமிஷனர் அருணாசலம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
3 ஆண்டுகளில் திருப்பணி நிறைவடையும்
ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறும் போது, "மீனாட்சி அம்மன் கோவில் வீரவசந்தராயர் மண்டப திருப்பணிகள் 3 ஆண்டுகளில் நிறைவடையும். கற்களை இங்கு கொண்டு வருவதில் எவ்வித சிரமமும் இல்லை. கற்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டோம், அங்கு 28 கற்கள் வந்துள்ளன. இம்மாத இறுதிக்குள் 200 கற்களும், இந்தாண்டிற்குள் அனைத்து கற்களும் வந்துவிடும். அறங்காவலர் குழு விரைவில் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.