மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரெயில்

மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதால் தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2024-03-18 01:52 GMT

கோவை,

தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கோவையில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வர வசதியாக மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி இடையே ரெயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதேபோல் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் திருச்செந்தூர், மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட ஆன்மிக தளங்களுக்கு சென்று வர இந்த ரெயிலை இரவு நேரத்தில் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி இடையே வாராந்திர சிறப்பு ரெயிலாக இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி இடையே புதிய வாராந்திர ரெயில் இயக்கப்படுகிறது. இதன்படி தூத்துக்குடியில் இருந்து வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இரவு 10.50 மணிக்கு புறப்படும் தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் விரைவு ரெயில் (எண்: 16766) மறுநாள் காலை 7.15 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

மறுமார்க்கமாக வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி விரைவு ரெயில் (எண்: 16765) மறுநாள் காலை 4.20 மணிக்கு தூத்துக்குடி ரெயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரெயிலானது, கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. மேலும் எந்தத் தேதியில் இருந்து இந்த புதிய ரெயில் சேவை தொடங்கப்படும் எனக் குறிப்பிடப்படவில்லை.

 

Tags:    

மேலும் செய்திகள்