கெங்கவல்லி
கெங்கவல்லியில் செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வந்தது. இந்த வாரச்சந்தை அருகே போலீஸ் நிலையம், தீயணைப்பு துறை அலுவலகம், தாசில்தார் அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இருந்து வருகிறது. இதனால் தீயணைப்பு வாகனம் வெளியே செல்ல சிரமம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வாரச்சந்தையை இடமாற்றம் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுத்த முடிவின்படி தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் வாரச்சந்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முதல் வாரச்சந்தை இடமாற்றம் செய்யப்பட்டு உயர் மின்கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இந்த சந்தையில் கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி சென்றனர்.