புதர்மண்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்
புதர்மண்டிக்கிடக்கும் சுகாதார வளாகம்
தளி
இயற்கை எழில் சூழ்ந்த கிராமத்தின் சுகாதாரத்தை பேணிக்காத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சுகாதார வளாகத்தின் பங்கு முக்கியமானதாகும். கிராமப்புறங்களில் வெட்ட வெளியில் அசுத்தம் செய்வதை தவிர்த்து தண்ணீர் வசதியோடு கூடிய பொது சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டது. அந்த வகையில் ஜல்லிபட்டி ஊராட்சி ஜே.வி.ஆர். நகர் பகுதியில் பெண்கள் பயன்பெறும் வகையில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. கட்டிய புதிதில் சில மாதங்கள் பராமரித்து பயன்பாட்டில் வைத்திருந்தனர்.அதன் பின்பு அவற்றைமுறையாக பராமரிக்க வில்லை. இதனால் பெண்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கிராமங்களில் கட்டப்பட்ட சுகாதார வளாகம் முள் செடிகள் சூழ்ந்து புதராக மாறி உள்ளது. இதனால் விஷஜந்துக்கள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலும் உள்ளது. எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஜல்லிபட்டி கிராமத்தில் முள்செடிகள் சூழ்ந்து உள்ள சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு புதிதாக சுகாதார வளாகத்தை கட்டுவதற்கு முன் வர வேண்டும்.