திருமணமான நபர்களை குறிவைத்தேமோசடியை அரங்கேற்றிய 'கல்யாண ராணி'
சமூக வலைதளங்களில் காதல் மொழி பேசி மயக்கிய கல்யாண ராணி குறித்து போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அதாவது, திருமணமான நபர்களை குறி வைத்தே இந்த மோசடியை அரங்கேற்றியது தெரிய வந்தது.
நிதி நிறுவன அதிபர்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே எம்.செட்டிப்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). நிதி நிறுவனம் நடத்தி வரும் இவர், ஓமலூர் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த ரசீதா (36) என்ற பெண்ணுடன் எனக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. அழகுக்கலை நிபுணரான அவரும், நானும் கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி ஓமலூர் ஈஸ்வரன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டோம்.
சில நாட்கள் என்னுடன் குடும்பம் நடத்திய அவர், திடீரென மாயமானார். ரசீதா பற்றி அவரது உறவினர்களிடம் விசாரித்த போது, அவர் ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்து கொண்டதும், என்னை 3-வதாக திருமணம் செய்து விட்டு ஏமாற்றியதும் தெரிய வந்தது. அவர் என்னுடைய 4 பவுன் நகை, ரூ.1½ லட்சத்தை எடுத்துக் கொண்டு மாயமாகி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
அழகில் மயக்கம்
இதுதொடர்பாக தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரசீதா குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, விசாரணையில் வெளியான தகவல்கள் பற்றி போலீசார் கூறியதாவது:- அழகுக்கலை நிபுணரான ரசீதா, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல்வேறு மாடர்ன் உடைகளை அணிந்து தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். ரசீதாவின் புகைப்படங்களுக்கு ஏராளமானவர்கள் பதில் அளித்துள்ளனர். அந்த வகையில் ரசீதாவின் புகைப்படங்களை பார்த்து அவரது அழகில் மூர்த்தி மயங்கியதாக தெரிகிறது. அதன்பிறகு இருவரும் இணையதளமூலமாக காதலிக்க தொடங்கியதோடு தங்களது புகைப்படங்கள் உள்பட பல்வேறு விஷயங்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் மூர்த்தியை, திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக ரசீதா தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
குடும்பம் நடத்தினார்
இது ஒருபுறம் இருக்க, கோவையில் உள்ள ஒரு அழகு நிலையம் ஒன்றில் ரசீதா வேலை பார்த்து வந்துள்ளார். இதற்காக அவர் கோவையில் வாடகை வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மூர்த்திக்கு விடுமுறை கிடைக்கும் நேரத்தில் எல்லாம் ரசீதா அவரை கோவைக்கு வருமாறு கூறுவாராம். மூர்த்தியும் கோவைக்கு சென்று இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த மூர்த்தி, ரசீதாவை 2-வதாக திருமணம் செய்து கொண்டு ஓமலூர் பகுதியில் ஒரு வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர். திடீரென ரசீதா மாயமான பிறகுதான், அவர் ஏற்கனவே 2 பேரை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியது மூர்த்திக்கு தெரிய வந்தது. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆண் நண்பருடன் பதுங்கல்
அவரை பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். அவர், கோவையில் ஆண் நண்பருடன் பதுங்கி இருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது. அவரது சமூக வலைதள பக்கங்களை கண்காணித்து வருகிறோம். அவை அனைத்தையும் ரசீதாவே முடக்கி வைத்துள்ளார். அவரது எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் ரசீதா தொடர்புடைய நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவர், அழகு நிலையம் நடத்தி வந்ததுடன், சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளதால் ஏராளமான ஆண் நண்பர்கள் அவருக்கு உள்ளதாக தெரிகிறது. எனவே அவருடன், சமூக வலைதள பக்கங்களில் தொடர்பில் இருந்த நபர்களையும் கண்காணித்து வருகிறோம்.
எத்தனை பேருடன் திருமணம்?
இதுவரை எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, சமூக வலைத்தளங்களில் காதல் மொழி பேசி ரசீதா 3 பேரை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றியதுடன், கல்யாண ராணியாக வலம் வந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆனாலும் ரசீதா இன்னும் சிலரை திருமணம் செய்து கொண்டு அவர்களிடமும் நகை, பணத்தை எடுத்து கொண்டு ஏமாற்றி இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம்.
அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி இருக்கிறோம். விரைவில் ரசீதாவை, அவருடைய ஆண் நண்பருடன் கைது செய்து விடுவோம். அதன்பிறகுதான் அவருக்கு எத்தனை பேருடன் திருமணம் ஆகி உள்ளது. அவரால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளிட்ட தகவல்கள் தெரிய வரும்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
இன்னொரு நபர்
ரசீதா பேசுவதாக சில ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதில் பேசும் ஆண், சேலத்தில் கார்த்திக் என்ற நபரையும் ரசீதா ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கூறுகிறார். அந்த கார்த்திக் யார், என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே ரசீதா, ஆட்டோ டிரைவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், திருமணமான நபரை குறி வைத்தே தனது கல்யாண மோசடியை அரங்கேற்றி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது.