தபால் நிலையத்தில் இணையதள கோளாறு
சோலையாறு நகர் தபால் நிலையத்தில் இணையதள கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
வால்பாறை
சோலையாறு நகர் தபால் நிலையத்தில் இணையதள கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இணையதள கோளாறு
வால்பாறை அருகே சோலையாறு நகரில் துணை தபால் நிலையம் அமைந்துள்ளது. இங்கு மணியார்டர் அனுப்புவது, சிறு சேமிப்பு பணம் செலுத்துவது உள்ளிட்ட சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வெளிமாநில தோட்ட தொழிலாளர்கள் தபால் சேவையை பெரிதும் நம்பியுள்ளனர்.
இந்த நிலையில் சோலையாறு நகர் துணை தபால் நிலையத்தில் கடந்த 21-ந் தேதி முதல் இணையதள கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக தபால் சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மணியார்டர் அனுப்புவது, சிறு சேமிப்பு பணம் செலுத்துவது, ஆர்.டி. பணம் செலுத்துவது போன்ற சேவைகளை பெற முடியாமல் வாடிக்கையாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
உரிய நடவடிக்கை
இதற்கு மாற்று ஏற்பாடாக தபால் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து மணியார்டர் தொகைகள், சிறுசேமிப்பு தொகைகள் ஆகியவற்றை பெற்று 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வால்பாறை தபால் நிலையத்திற்கு கொண்டு சென்று செலுத்தி வருகின்றனர். இதனால் பணியாளர்களும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கூறியதாவது:-
இணையதள கோளாறு காரணமாக தபால் சேவையை பெறுவது சிரமமாகி உள்ளது. குறிப்பாக சோலையாறு நகர் பகுதியை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதியில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பணம் அனுப்ப முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இங்கு அடிக்கடி இணையதள சேவை பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே இதற்கு தபால் துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.