நெய்தல் பூங்கா கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்
நாகூர் கடற்கரையில் கிடப்பில் போடப்பட்டுள்ள நெய்தல் பூங்கா கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகூர்:
நாகூர் கடற்கரையில் கிடப்பில் போடப்பட்டுள்ள நெய்தல் பூங்கா கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலும் கடல் சார்ந்த இடமும்
கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் நிலப்பகுதியாகும். நெய்தல் நிலப்பகுதியான நாகப்பட்டினம் மாவட்டத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் நாகூர் கடற்கரையில் தமிழ்நாடு தோட்டக்கலை துறை சார்பில் ரூ.6 கோடி மதிப்பில் நெய்தல் பூங்கா அமைக்கப்படும் என கடந்த பிப்ரவரி மாதம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நாகூர் கடற்கரை பகுதியில் 7.56 ஏக்கர் பரப்பளவில் இடங்கள் கையகப்படுத்தப்பட்டது. அங்கு நெய்தல் பூங்கா அமைவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து அப்போதைய நாகப்பட்டினம் கலெக்டர் அருண்தம்புராஜ், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் நாகூரில் பூங்கா அமையவுள்ள இடத்தை ஆய்வு செய்தனர்.
நெய்தல் பூங்கா
பின்னர் இந்த இடத்தில் கடலும், கடல் சார்ந்த நெய்தல் நில மக்களின் வாழ்க்கை முறை, உணவு, தொழில், காலநிலை, தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், பொழுதுபோக்கு போன்றவற்றின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் நாகூரில் நெய்தல் பூங்கா அமையும்.
அல்லிப்பூ இனங்களுடன் கூடிய குட்டைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. இந்த பூங்கா 6 மாதங்களுக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
விரைந்து தொடங்க வேண்டும்
ஆனால் ஆய்வுக்கு பின்னர் பூங்கா அமைப்பதற்கான வேறு எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை. எனவே கிடப்பில் போடப்பட்ட நெய்தல் பூங்கா கட்டுமான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.