அனைத்து மாவட்டங்களிலும் வானிலை தானியங்கி கருவிகள் நிறுவப்படும்
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வானிலை தானியங்கி கருவிகள் நிறுவப்படும் என்று ஆராய்ச்சி மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
விழிப்புணர்வு முகாம்
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் விவசாயிகள், கால்நடை வளர்ப்போருக்கான வானிலை முன்னறிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதனை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் இணைந்து நடத்தியது..
முகாமுக்கு சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வர் கருணாகரன் தலைமை தாங்கினார். பேராசிரியர் தங்க.தமிழ்வாணன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக வானிலை ஆராய்ச்சி மைய தென்மண்டல தலைவர் சே.பாலச்சந்திரன் கலந்து கொண்டு, வானிலை மற்றும் வேளாண்மை துறைகள் குறித்தும் அவற்றின் வளர்ச்சி குறித்தும் விளக்கி பேசினார்.
அதன்பிறகு கறவை மாடுகளில் பால் உற்பத்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்து மருந்துகளை வழங்கினார். இதில் கால்நடை பல்கலை ஆராயச்்சி மைய தலைவர் பேராசிரியர் பாண்டியன், கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் அந்துவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை
பின்னர் வானிலை ஆராய்ச்சி மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வளர்ந்து வரும் தொழில்நுட்ப மாற்றங்களை பயன்படுத்தி வேளாண்மையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும். காற்றில் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் காற்றின் அழுத்தம் ஆகியவையே ஒரு மாவட்டத்தின் வேளாண்மையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியும் வேளாண்மையை வளர்ச்சி அடைய செய்யலாம்.
வானிலையை கணித்து வேளாண் துறைக்கு தகவல்கள் வழங்கப்படும். இதன் மூலம் பயிர்களை பயிரிடுவது தொடர்பாக விவசாயிகளுக்கு வேளாண்மை துறையினர் ஆலோசனை வழங்குவார்கள்.
பருவமழை
தென்மேற்கு பருவ மழையை பொருத்தவரையில் புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழ்நாட்டில் மொத்தமாக இயல்பை விட 9 சதவீதத்திற்கும் குறைவான மழையே பதிவாகி உள்ளது. வடமேற்கு மாவட்டங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்டவற்றில் இயல்பை விட 20 சதவீதத்துக்கு குறைவான மழைப்பொழிவு பதிவாகியுள்ளன.
தமிழ்நாட்டில் மேக கூட்டங்கள் இல்லாத காரணத்தினாலும், வெப்பம் நேராக பூமியில் விழுவதாலும், காற்றில் ஈரப்பதம் குறைந்து இருப்பதன் காரணமாகவும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி அளவிற்கு அதிகரித்து காணப்படுகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் வானிலை மழை மானிகள், விவரங்களை பதிவு செய்ய என அதற்கான தானியங்கி கருவிகள் நிறுவப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது கனமழைக்கு வாய்ப்பு இல்லை. எனினும் இடியுடன் கூடிய மழை 3 நாட்களுக்கு பெய்யக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.