ஈரோடு கிழக்கு தொகுதியில் பெண் வேட்பாளரை நிறுத்துவோம் -சீமான் பரபரப்பு பேட்டி
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பெண் வேட்பாளரை நிறுத்துவோம் என்றும், எந்த விமர்சனங்களையும் நாங்கள் கண்டுகொள்வதில்லை என்றும் சீமான் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களப்பணிகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களைச் சந்தித்து கலந்தாய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, முதற்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனியார் அரங்கு ஒன்றில் நேற்று நடைபெற்றது.
பெண் வேட்பாளரை நிறுத்துவோம்
முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சீமான், நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் களப்பணிகள் குறித்து திட்டமிடுவதற்காக கட்சியின் முதன்மைப் பொறுப்பாளர்களைச் சந்தித்து கலந்தாய்வு செய்து வருகிறோம். அதைத்தொடர்ந்து வருகிற 29-ந் தேதி ஈரோட்டில் வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெறும். பிறகு தேர்தல் பிரசாரம் மேற்கொள்வோம்.
இந்த இடைத்தேர்தலில் நான் (சீமான்) போட்டியிடவில்லை, அங்கு ஒரு பெண் வேட்பாளரை நிறுத்த உள்ளோம். நாங்கள் தேர்தலில் போட்டியிட்டால் தி.மு.க.வின் எதிர்ப்பு வாக்குகளை பிரித்து விடுவோம், அதனால் தி.மு.க.வே வெல்லும் என்பது போன்ற விமர்சனங்களை நாங்கள் கண்டுகொள்வதில்லை. எங்களின் நோக்கம் வெல்வது ஒன்று தான். எங்கள் இலக்கை நோக்கித்தான் நாங்கள் பயணிக்கிறோமே தவிர பிறர் கூறும் விமர்சனங்களை எல்லாம் நாங்கள் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. பிற கட்சிகள் எத்தனை கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், எங்களுக்கு அதைப்பற்றி எந்த பயமும், கவலையும் இல்லை, நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.