"போதை பொருள் இல்லா தமிழகம் வேண்டும்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
எல்லா மாவட்டத்திலும் போதை தொடர்பான வழக்குகளை விரைந்து முடியுங்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தொடர்பான விரிவான ஆய்வுக் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்றுதலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள், தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் குறித்தும் முதல்-அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.
முதல்வர் தலைமையில் 10.8.2022 அன்று தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுப்பதற்காக முதன்முதலில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசால் போதைப் பொருட்களுக்கு எதிராக சிறப்பு அதிரடி சோதனைகள் 2021-ஆம் ஆண்டு டிசம்பரில் "இரு வார கால" ஆப்பரேஷனாக நடத்தப்பட்டது. மேலும், மார்ச் 2022-இல் ஆப்பரேஷன் "கஞ்சா வேட்டை 2.0", டிசம்பர் மாதம் ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 3.0 நடத்தப்பட்டது.
இந்த அதிரடி சோதனைகள் மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் மூலம், குட்கா விற்பனை தொடர்பாக 48 ஆயிரத்து 838 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 50 ஆயிரத்து 875 நபர்கள் கைது செய்யப்பட்டு, 11 லட்சத்து 59 ஆயிரத்து 906 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தொடர்பாக 12 ஆயிரத்து 294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17 ஆயிரத்து 250 நபர்கள் கைது செய்யப்பட்டு, 26 ஆயிரத்து 525 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், போதைப் பொருள் விற்பனை தொடர்பாக தகவல் தெரிவித்திட அறிவிக்கப்பட்டுள்ள புதிய வாட்ஸ் அப் எண் 9498111191 குறித்தும், பொதுமக்கள் இது தொடர்பான புகார் அளிப்பதை எளிமையாக்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள காவல்துறை முகநூல் மற்றும் டுவிட்டர் பக்கங்களின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தனர். கஞ்சா, குட்கா தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்வது, வங்கிக் கணக்குகள் முடக்கம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் வாயிலாக போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்திடவும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை அதிகப்படுத்திடவும், போதைப் பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும், அதை அடியோடு ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.
"தன் காவல் சரகத்தில் ஒரு கடையில் கூட கஞ்சா விற்கவில்லை" என்று ஒவ்வொரு காவல் நிலைய அதிகாரியும் அறிவிக்கும் நிலை வர வேண்டும் என்றும், "தன் உட்கோட்டத்தில் அப்படியொரு பொருட்கள் நடமாட்டமே இல்லை" என்று காவல் துணை கண்காணிப்பாளர்கள், உதவி ஆணையர்கள் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லும் காலம் மாற வேண்டும் என்றும், எல்லாவற்றையும் விட தன் மாவட்டத்தில் போதைப்பொருட்கள் விற்பனை எதுவுமே இல்லை என்ற நிலையை எட்டி விட்டோம் என பெருமிதத்துடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் தெரிவிக்கும் நிலை வரவேண்டும் என்றும், அப்போது தான் தம்மைப் போல் - தங்கள் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்ற நிம்மதி பெற்றோர்களுக்கும், தாய்மார்களுக்கும் வரும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்தார்.
ஒவ்வொரு குற்றவாளி கைது செய்யப்படும்போதும் அக்குற்றவாளி இரண்டாவது முறையாக இந்தக் குற்றத்தைச் செய்கிறானா என்பதை ஆய்வு செய்து, அதுபோன்ற குற்றவாளிகள் ஜாமீனில் செல்வதை சட்டரீதியாகத் தடுத்திடவும், தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரிடம் சி.ஆர்.பி.சி.யின் (Cr.Pc) கீழ் பிணை முறிவு பத்திரம் மூலமாக "உறுதிமொழி பெறுவது" (Bind Over) கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், கஞ்சா குட்கா வழக்குகளில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், தேவைப்பட்டால் அதற்கென்று தனிக்குழு அமைத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைவில் வழக்குகளை முடித்து தண்டனை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மருந்து வகைகளை போதைப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டு வருவதால் மருத்துவத் துறையுடன் ஒருங்கிணைந்து காவல் அதிகாரிகள் செயல்பட்டு, மருந்துக் கடைகளில் தீவிர சோதனை நடத்திட வேண்டும் என்றும், பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் காணொலிக் காட்சி வாயிலாக இணைந்த மண்டல காவல் துறை தலைவர்கள், மண்டலங்களில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர். குற்ற வழக்குகள் பதிந்து தண்டனை வழங்கப்பட்ட விவரங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு விவரங்கள், கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனையாளர்கள் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட விவரங்களையும் தெரிவித்தனர்.
இந்த அரசு பொறுப்பேற்றவுடன் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுக்கும் நடவடிக்கையில் தீவிரமாகவும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்த முதல்-அமைச்சர், அண்டை மாநில தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர்கள் ஆகியோருடன் ஒருங்கிணைந்த ஆலோசனை மேற்கொண்டு, போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்திடவும், விழிப்புணர்வு பிரச்சாரங்களை தீவிரப்படுத்திடவும் அறிவுறுத்தினார். எல்லாவற்றிற்கும் மேலாக போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கிட அனைவரும் அயராது பணியாற்றிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.