நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் முழுமையான வெற்றிக்கு பாடுபட வேண்டும் -எடப்பாடி பழனிசாமி பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் முழுமையான வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2023-09-11 00:18 GMT

சென்னை,

அ.தி.மு.க. பொன்விழா மாநாடு கடந்த மாதம் 20-ந் தேதி மதுரையில் நடந்தது. மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், மாநாட்டு குழுவினரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அழைத்து பாராட்டு தெரிவித்தார். அப்போது மாநாட்டு குழு சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொதுச்செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மக்களை தேடி செல்லுங்கள்

கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நிலையில் நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கிறது. அப்படி இல்லையென்றாலும், எப்போது தேர்தல் நடந்தாலும் அதனை சந்திக்க அ.தி.மு.க. தயாராகவே இருக்கிறது. எனவே நிர்வாகிகள் அனைவரும் தீவிரமாக உழைக்க வேண்டும். மக்களை தேடி சென்று அ.தி.மு.க.வின் சாதனைகளை எடுத்து சொல்ல வேண்டும்.

அதே வேளை தி.மு.க. ஆட்சியின் வேதனைகளையும் சுட்டிக்காட்டுங்கள். இந்த ஆட்சியின் அவலநிலை, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, ஊழல் உள்ளிட்ட பிரச்சினைகளை மக்களிடம் எடுத்து செல்லுங்கள். இதனை மக்களிடம் உணர்த்திடுங்கள். மக்களை அடிக்கடி சந்தித்து இதனை சொல்லுங்கள்.

முழுமையான வெற்றிக்கு...

அக்டோபர் 5-ந் தேதிக்குள் மகளிர் குழு, இளைஞர்-இளம்பெண்கள் பாசறைக்கு அதிக உறுப்பினர்களை நியமியுங்கள். பூத் கமிட்டிகளையும் அமைத்து அப்பணிகளை முடியுங்கள். இந்த விவரங்களை கட்சி தலைமைக்கு உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். உறுப்பினர்கள் நியமனத்தில் கீழ்மட்டத்தில் உள்ள உறுப்பினர்களிடமும் கலந்துபேசி முடிவு எடுங்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் முழுமையான வெற்றிக்கு பாடுபடுங்கள். இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு முழுமூச்சாக பணியாற்றுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்துக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களை திசைதிருப்ப...

மக்கள் மத்தியில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அலை பெருகிவருகிறது. அதேவேளை தி.மு.க.வுக்கு எதிர்ப்பு அலை வீசுகிறது. தேர்தல் எப்போது வரும்? என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தி.மு.க.வினர் தொகுதிக்குள் போக முடியாத வகையில், திருப்பி அனுப்பும் நிலைதான் ஒவ்வொரு தொகுதியிலும் நிலவுகிறது. 'ஆட்சியே போனாலும் பரவாயில்லை' என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். உண்மையிலேயே இந்த ஆட்சி போகத்தான் போகிறது. 2024-ம் ஆண்டுக்கு முன்பாகவே ஆட்சி காலியாகிவிடும். இது போகவேண்டிய ஆட்சிதான். மக்கள் விரும்பாத ஆட்சி தானே இது.

மின் கட்டண உயர்வு, வீட்டு வரி, சொத்துவரி உயர்வு, பதிவு கட்டணம் உயர்வு என தமிழகத்தில் எத்தனையோ பிரச்சினைகள் கொழுந்துவிட்டு எரிகின்றன. ரோம் நகர் தீப்பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்த கதையாக, தமிழகம் பற்றிய கவலையில்லாமல் சனாதனம் என்ற ஆயுதத்தை எடுத்து மக்களை திசை திருப்பும் வேலையைத்தான் தி.மு.க. செய்கிறது.

உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம்

ஒரு மதத்தை இழிவுபடுத்துவது தவறு. உதயநிதி ஸ்டாலின் பேச்சை இஸ்லாமிய அமைப்புகளே கண்டித்துள்ளன. மதத்தின் உணர்வுகளை மதிக்க வேண்டும். ஆட்சியில் இருக்கும் தி.மு.க.வில் சமத்துவம் இருக்கிறதா?. இந்தியா கூட்டணியில் உள்ள டி.ராஜா, சீதாராம் யெச்சூரியை தலைவராக்கி விட முடியுமா?.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் சமத்துவம் வந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை பொது தொகுதியில் நிறுத்தி வெற்றிபெற செய்து அழகு பார்த்தது அ.தி.மு.க.தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்