கொள்கை இல்லாத அ.தி.மு.க.வினரை நாம் விமர்சிக்க வேண்டியது இல்லை - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
கொள்கை இல்லாத அ.தி.மு.க.வினரை நாம் விமர்சிக்க வேண்டியதில்லை என்று உத்திரமேரூரில் நடந்த ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டமும் மூத்த உறுப்பினர்கள் 2 ஆயிரத்து 83 பேருக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியும் 422 மகளிருக்கு இலவச தையல் எந்திரம் வழங்கியும் பொது தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த 188 மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான க.சுந்தர் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக் வரவேற்று பேசினார். காஞ்சீபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழியும் 422 பேருக்கு தையல் எந்திரமும் 188 மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வேலூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காஞ்சீபுரம் வந்தேன். காஞ்சீபுரத்தில் இருந்து உத்திரமேரூர் வருவதற்கு 1½ மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. காரணம் வழியெங்கும் உற்சாக வரவேற்பு. இளைஞர் அணி தொண்டர்கள், தி.மு.க. முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்த ஆட்சி சிறப்பாக நடைபெறுவதற்கு இதுவே சாட்சி. வழியெங்கும் என்னிடத்தில் பொதுமக்கள் மனுக்கள் அளித்துள்ளனர். அதை முதல்-அமைச்சரிடம் அளித்து உடனடியாக தீர்வு காண்பதற்கு முயற்சிப்பேன். அந்த நம்பிக்கை பொதுமக்களிடம் அதிகம் உள்ளதால்தான் நான் செல்லும் இடங்கள் எல்லாம் மனுக்களை அளிக்கின்றனர். மாநாடு போல இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கும் மாவட்ட செயலாளர் சுந்தரை பாராட்டுகிறேன். அவர் இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக செய்து ஒவ்வொருவரையும் நான் தனியாக சந்திக்க கூடிய அளவில் கட்டுக்கோப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்.
பொற்கிழியை உங்கள் அனைவருக்கும் நான் நேரடியாக கொடுக்க இருக்கிறேன். என்னை நிகழ்ச்சிக்கு அழைக்க கூடிய அழைப்பாளர்களிடம் நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தால் தி.மு.க.வில் உள்ள மூத்தவர்களுக்கு உதவும் விதத்தில் பொற்கிழி அளிப்பதாக இருந்தால் வருகிறேன் என்று கூறினேன். இப்போது நான் செல்லும் கூட்டத்தில் இப்படிப்பட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய கூறுகிறேன். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும், பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் தி.மு.க. மிகபெரிய வெற்றி பெற்றது என்றால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியும் அதை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையும் உங்களிடம் இருந்ததால்தான். அது மட்டுமல்லாமல் தி.மு.க. தொண்டர்களின் உண்மையான உழைப்பு இந்த வெற்றிகளுக்கு எல்லாம் காரணம். அதனால்தான் இப்படி பட்ட நிகழ்ச்சிகளை எல்லா இடத்திலும் நடத்தும்படி என்னிடம் வந்து தேதி கேட்பவர்களிடம் கூறுகிறேன். கொள்கை இல்லாத அ.தி.மு.க.வினரை நாம் விமர்சிக்க வேண்டியது இல்லை. அவர்களே ஒருவரை ஒருவர் அடித்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் வெள்ளியால் செய்யப்பட்ட வீரவாளை பரிசாக வழங்கினார். கூட்டத்தில் காஞ்சீபுரம் நகர துணைச்செயலாளர் குடும்பத்தினருக்கு குடும்ப நலநிதியாக ரூ.5 லட்சமும், உத்திரமேரூர் நீலகண்டன் என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டது மேலும் இளைஞர் அணி அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம் மாவட்டத்தின் சார்பாக அளிக்க இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ராஜலட்சுமி குஜராஜ், ஒன்றிய குழுத்தலைவர் தேவேந்திரன், பேரூராட்சி செயலாளர் பாண்டியன், ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், குமார், பி.எம்.குமார், குமணன், பி.சேகர், பூபாலன், ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா ஞானசேகரன், உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார், மாவட்ட விவசாயிகள் அணி அமைப்பாளர் சோழனூர், ஏழுமலை, மதுராந்தகம் நகர தி.மு.க. செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர் சத்தியசாய், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சிவகுமார், கருங்குழி பேரூராட்சி முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சுந்தரமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.