இந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி.பேச்சு

Update: 2023-01-26 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை எதிரில் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம்.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட துணைசெயலாளர்கள் அண்ணாதுரை, காமராஜ், புவனேஷ்வரிபெருமாள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் எத்திராஜ், எஸ்.என்.டி.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரசெயலாளர் சுப்ராயலு வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா எம்.பி. கலந்துகொண்டு பேசும்போது, தமிழ் மொழிக்காக போராடி உயிரிழந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க. பல போராட்டங்கள் நடத்தி வருகிறது. இருந்த போதிலும் தமிழகத்தில் இந்தியை திணிக்க நினைக்கிறார்கள். இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். வருகிற 2024-ம் ஆண்டில் இந்தியாவின் பிரதமர் யார்? என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் தீர்மானிப்பார் என்றார். தொடர்ந்து தலைமை கழக பேச்சாளர் தமிழ்சாதிக் சிறப்புரையாற்றினார். முன்னதாக மாவட்ட செயலாளர் வசந்தம்.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ஆ.ராசா எம்.பி. ஆகியோர் மொழிப்போர் தியாகிகளின் உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜி, பொதுக்குழு உறுப்பினர் பொன்.ரா.மணிமாறன், கூட்ட ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட மாணவர் அணி செயலாளருமான விஜய்ஆனந்து, ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், கனகராஜ், நெடுஞ்செழியன், சத்தியமூர்த்தி, அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்