பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் ஏழை, எளிய முஸ்லிம் மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும்

வேலூரை அடுத்த அரியூரில் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் ஏழை, எளிய முஸ்லிம் மக்கள் குடியிருக்க வீட்டுமனை வழங்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Update: 2022-06-27 17:53 GMT

வேலூரை அடுத்த அரியூரில் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் ஏழை, எளிய முஸ்லிம் மக்கள் குடியிருக்க வீட்டுமனை வழங்க வேண்டும் என்று குறைதீர்வு நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

குறைதீர்வு நாள் கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இதில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்டவை தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.

காட்பாடி தாலுகா கிரிகிரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் ஏராளமான கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்களை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும். வேறு கிராமத்தை சேர்ந்தவர்களை நியமிக்க கூடாது என்று குறிப்பிட்டிருந்தனர்.

வீட்டுமனை வழங்க...

கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி இஸ்லாமிய ஜனநாயக பேரவை சார்பில் மாநில துணை செயலாளர் ஓ.எஸ்.நிஜாமுத்தீன் அஸ்லம் தலைமையில் நிர்வாகிகள் கலீல், தமீம், இஸ்மாயில் மற்றும் ஏராளமான பெண்கள் மனு அளித்தனர். அதில், வேலூர் மாநகரில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஏழை, எளிய மக்கள் பல ஆண்டுகளாக குடியிருக்க இடம் இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். வேலூரை அடுத்த அரியூர் பகுதியில் வக்பு வாரிய நிர்வாகத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் உள்ளது. அந்த பகுதியில் ஏழை, எளிய முஸ்லிம் மக்கள் குடியிருக்க வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஊசூரை அடுத்த சேக்கனூர் கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராம மக்கள் பயன்படுத்தும் பொதுவழியை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும் பொதுவழியை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

வாழ்த்து பெற்றனர்

இமாச்சல பிரதேசத்தில் முதலாவது கேலோ தேசிய பளு தூக்கும்போட்டி கடந்த 14 முதல் 22-ந் தேதி வரை நடந்தது. இதில், வேலூர் மாவட்ட பளு தூக்கும் சங்கம் சார்பில் பங்கேற்ற போஷிகா 40 கிலோ எடை பிரிவிலும், ஓவியா 77 மற்றும் 81 கிலோ எடை பிரிவிலும் தங்க பதக்கம் வென்றனர். அவர்கள் இருவரும் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தியை சந்தித்து தங்க பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்