தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை 75 சதவீதம் நிறைவேற்றி விட்டோம்: உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை 75 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Update: 2023-02-07 00:27 GMT

மதுரை,

தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த 72 ஆயிரத்து 122 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் 30 திட்டபணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மதுரையில் நேற்று நடந்தது. அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கோ.தளபதி எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கினர்.

விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

தேர்தல் வாக்குறுதி

இதுவரை நாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 75 சதவீதம் நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால் இதனை மக்களிடம் நாங்கள் கொண்டு போய் சேர்க்காததுதான் பிரச்சினை. ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்திற்கு தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து போட்டார்.

இதுவரை, தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் 220 கோடி பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 11 கோடியே 11 லட்சம் பயணம் ஆகும்.

ஏழை பெண்கள் கல்வியை தொடர புதுமை பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1 லட்சத்து 16 ஆயிரம் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. மேலும் 1 லட்சத்து 6 பேர் சேருவதற்கு விண்ணப்பம் வந்துள்ளது. இன்னும் 2 நாளில் அவர்களுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கப்படும். கொரோனா காலத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் 1 கோடியே 70 லட்சம் பேர் பயனடைந்தனர்.

விவசாயிகளுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் 37 ஆயிரம் இணைப்புகள் மதுரை மாவட்டத்தில் வழங்கப்பட்டு உள்ளது.

செங்கல் எடுத்து போராடுவார்கள்

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு நிதி ஒதுக்கி கட்டுமான பணியை தொடங்கவில்லை என்றால் மதுரை மக்கள் ஒவ்வொருவரும் கையில் செங்கல் எடுத்து போராடுவார்கள். தி.மு.க. எப்போதும் உங்களுடன் இருக்கும். எனவே நீங்களும் இந்த அரசுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்