முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவுக்காக காத்திருக்கிறோம் - அமைச்சர் துரைமுருகன்

முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவுக்காக காத்திருப்பதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

Update: 2022-09-02 08:50 GMT

கோப்புப்படம்

நெல்லை,

மதுரை, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டல நீர்வளத்துறை ஆய்வுக்கூட்டம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது. நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள பணிகளின் நிலை குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் துரைமுருகன் கேட்டறிந்தார். மேலும் அந்த பணிகளை துரிதப்படுத்த அவர் உத்தரவுகளை பிறப்பித்தார்.

தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டமான தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறு இணைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் திடீயூர் பகுதியில் நடந்து வரும் நதிநீர் இணைப்பு திட்டப் பணிகள் மற்றும் பச்சையாறு அணைக்கட்டு பகுதிகளை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "நீண்ட ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கபட்ட பணி தாமிரபரணி ஆறு-நம்பியாறு-கருமேனியாறு இணைப்பு திட்டம். நெல்லை மாவட்டத்தில் நடந்து வரும் நதிநீர் இணைப்பு திட்டத்தின் முதல் 2 பகுதிகள் 100 சதவீதம் முடிந்துள்ளது. 3-ம் பகுதி 99 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. 4-ம் பகுதி 58 சதவீதம் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் மாதத்திற்குள் நதிநீர் இணைப்பு திட்டம் பெருமளவு நிறைவு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தாமிரபரணி நதி நீர் இணைப்பு திட்டம் மொத்தமாக மார்ச் 2023-ல் நிறைவு பெற்று பயன்பாட்டுக்கு வரும்.

முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக எதுவும் இனி பேச மாட்டோம். முல்லைப் பெரியாறு தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம்.

நெல்லை மாவட்டத்தில் கல்குவாரிகள் மூடி இருப்பதால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறிய அளவிலான அபராதம் விதித்து கல்குவாரிகளை திறப்பதற்காக மாவட்ட கலெக்டரிடம் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர்கள் அதற்கு முன் நீதிமன்றத்தை நாடினார்கள். கல்குவாரிகளில் தவறு செய்திருந்தாலும் தொழிலாளர்களின் நிலையை எண்ணி அவர்களை மன்னிப்பதற்கு தயாராக உள்ளோம்" என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்