சுங்கச்சாவடியை சட்ட விதிகளை பின்பற்றி அகற்ற முயற்சி செய்து வருகின்றோம்

இனாம்காரியந்தலில் உள்ள சுங்கச்சாவடியை சட்ட விதிகளை பின்பற்றி அகற்ற முயற்சி செய்து வருகின்றோம் என்று மாவட்ட வளர்ச்சி குழு கூட்டத்தில் சி.என்.அண்ணாதுரை எம்.பி. கூறினார்.

Update: 2022-08-27 13:44 GMT

இனாம்காரியந்தலில் உள்ள சுங்கச்சாவடியை சட்ட விதிகளை பின்பற்றி அகற்ற முயற்சி செய்து வருகின்றோம் என்று மாவட்ட வளர்ச்சி குழு கூட்டத்தில் சி.என்.அண்ணாதுரை எம்.பி. கூறினார்.

மேற்பார்வைக்குழு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய மற்றும் மாநில அரசுத் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்டு உள்ள மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழுக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. ]

குழுத் தலைவரும், எம்.பி.யுமான சி.என்.அண்ணாதுரை தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, குழு உறுப்பினர் செயலரும், கலெக்டருமான முருகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வங்கிக்கடன் இணைப்பு திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குக் குழுக்கள் விவரம் மற்றும் அக்குழுக்களுக்கு 2022-23-ம் ஆண்டிற்கு வழங்கப்பட்ட கடன் விவரம் ஆலோசிக்கப்பட்டது.

மேலும் பிரதம மந்திரி முன்னோடி கிராம வளர்ச்சித் திட்டம், பாராளுமன்ற உறுப்பினரின் மாதிரி கிராமத் திட்டம், மதிய உணவுத் திட்டம், பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம், சமக்ரா சிக்‌ஷா, தீன்தயாள் உபத்யாயா கிராம ஜோதி யோஜனா, ஒருங்கிணைக்கப்பட்ட மின் மேம்பாட்டு திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பிலான நலத்திட்டங்கள்,

தாட்கோ மூலம் செயல்படுத்திய திட்டங்கள், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை போன்றவை குறித்து கூட்டத்தின் மூலமாக ஆலோசிக்கப்பட்டு பணிகளை மாவட்ட நிவாகத்துடன் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் ஒன்றிணைந்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிறுத்தப்பட்டது.

கூட்டத்தில் சி.என்.அண்ணாதுரை எம்.பி. பேசியதாவது:-

சுங்கச்சாவடி

மற்ற மாவட்டங்களில் நடைபெற்று வரும் பணிகளை விட திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பொதுப்பணித்துறை அமைச்சர் இந்த மாவட்டத்தை முழு மூச்சுடன் வளர்ச்சி பாதையில் நடத்தி கொண்டு இருகிறார். விரைவில் பல்வேறு பெரிய திட்டங்கள் இந்த மாவட்டத்திற்கு வர உள்ளது.

அனைத்து அரசு திட்டங்களும் எல்லா பகுதிகளுக்கு செல்ல வேண்டும். ஏழை, எளிய மக்களும் முன்னேற வேண்டும் என்ற முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் எண்ணத்தை உள்ளாட்சி பிரதிநிதிகள் நிறைேவற்ற வேண்டும். அனைத்த திட்டங்களிலும் திருவண்ணாமலை மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ வேண்டும்.

இந்த ஆண்டு இத்திட்டத்தில் குளம் மற்றும் அத்தியாவசிய பணியாக பள்ளிகளின் சுற்றுச்சுவர்கள் புனரமைப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இனாம்காரியந்தலில் உள்ள சுங்கச்சாவடி இருக்க கூடாது என்று விவசாயிகள் உள்பட அனைத்து அமைப்புகள் சார்பில் தெரிவித்துள்ளனர். இதை வலியுறுத்தி இந்த சுங்கச்சவாடியை அகற்றுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எம்.பி. என்ற முறையில் ஏற்கனவே பேசியுள்ளேன்.

மத்திய மந்திரியிடமும் இதுகுறித்து முறையிட்டு மனு அளித்து உள்ளோம். மேலும் பொதுப்பணித்துறை அமைச்சரும் மத்திய மந்திரியை சந்தித்த போது இதுகுறித்து கடிதம் கொடுத்துள்ளார்.

எனவே இந்த சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்பதில் மக்கள் பிரதிநிதிகள் முனைப்பாக இருக்கிறோம். சட்ட விதிகளை பின்பற்றி அந்த சுங்கச்சாவடியை அகற்ற முயற்சி செய்து வருகிறோம்.

மாவட்ட அளவிலான அதிகாரிகள் குழு உறுப்பினர்களை அழைத்து ஆய்வு செய்து குறைகள் ஏதேனும் இருந்தால் அறிக்கையாக வழங்கப்பட்டு அதன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பார்வதிசீனிவாசன், துணைத்தலைவர் பாரதி ராமஜெயம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வன அலுவலர் அருண்லால், மகளிர் திட்ட இயக்குனர் சையத் சுலைமான், ஒன்றியக்குழுத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்