கலெக்டரிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர்

கலெக்டரிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டனர்.

Update: 2023-06-12 19:09 GMT

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறையின் செயலாளர் செல்லம்மாள் தலைமையில் அக்கட்சியினர் திரண்டு, தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக்கோரி பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து கையெழுத்தாக பெற்ற மனுக்களை கலெக்டரிடம் அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட வந்தனர்.

அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழகத்தில் முழுமையாக மது விலக்கை அமல்படுத்தக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்கள் பூரண மது விலக்கை அமல்படுத்திய பிறகு நிறைய இடங்களில் வழிகாட்டுதல் முகாம்கள் அமைத்து மதுப்பழக்கம் உடையவர்களுக்கு சிகிச்சையும், அறிவுரைகளும் வழங்கப்பட வேண்டும். இதுவரை மதுவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், பெண்களுக்கு உரிய வழிகாட்டுதல்களையும், நிவாரணங்களையும் வழங்க அரசு முன் வர வேண்டும். பூரண மது விலக்கை அரசு அமல்படுத்தவில்லை என்றால் அடுத்த கட்டமாக நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறையினர் சட்ட போராட்டத்தையும், மக்கள் போராட்டத்தையும் முன்னெடுக்கும், என்றனர். பின்னர் அவர்கள் தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்தக்கோரி பொதுமக்களிடம் இருந்து கையெழுத்து பெற்ற மனுக்களை கலெக்டர் கற்பகத்தை சந்தித்து அளித்து விட்டு கலைந்து சென்றனர்.

குன்னம் தாலுகா, பேரளி வடக்கு தெருவை சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் ராகவன் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், சோழர் காலத்து ஏரிகளுள் ஒன்றான சாத்தனூர் பெரிய ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுதானிய இயக்கத்தை மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருத்தி மற்றும் மக்காச்சோள விதைகளை முறையாக ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்