'போலீசாரின் தொந்தரவால் நிம்மதி இழந்து தவிக்கிறோம்'

கணவரை அனுப்பி வைக்குமாறு போலீசார் அடிக்கடி வந்து தொந்தரவு செய்வதால் நிம்மதி இழந்து தவிக்கிறோம் என்று தஞ்சை மாவட்ட நீதிபதியிடம், 2 வயது குழந்தையுடன் பெண் புகார் அளித்தார்.

Update: 2023-04-10 18:43 GMT

கணவரை அனுப்பி வைக்குமாறு போலீசார் அடிக்கடி வந்து தொந்தரவு செய்வதால் நிம்மதி இழந்து தவிக்கிறோம் என்று தஞ்சை மாவட்ட நீதிபதியிடம், 2 வயது குழந்தையுடன் பெண் புகார் அளித்தார்.

2 வயது குழந்தையுடன் புகார்

தஞ்சை விளார் சாலையில் உள்ள தில்லை நகர் லெனின் தெருவை சேர்ந்தவர் பிரதிபா. இவருடைய கணவர் பாலாஜி. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

நேற்று பிரதிபா தனது குழந்தையுடன் தஞ்சை மாவட்ட கோர்ட்டுக்கு வந்தார். பின்னர் அவர் மாவட்ட முதன்மை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டினிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

போலீசார் தொல்லை

எனது கணவர் பாலாஜி, கொலையாளிக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக பட்டுக்கோட்டை போலீசாரால் கடந்த 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வெளியே வந்த அவர் பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் 30 நாட்கள் தினமும் கையெழுத்திட்டு வந்தார். எனது கணவர் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 2 ஆண்டுகளாக பாலாஜி எந்தவித குற்றசெயலிலும் ஈடுபடவில்லை. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி சிறப்பு காவல்படையினர் எனக்கூறி எங்கள் வீட்டிற்கு வந்த போலீசார் எந்த ஒரு காரணமும் இன்றி எனது கணவரை அனுப்பி வைக்குமாறு கூறி என்னையும், குழந்தையும் தகாத வார்த்தைகளால் பேசினர். இதனால் நாங்கள் மன உளைச்சலுக்கு உள்ளானோம். எங்களையும் நிம்மதியாக வாழவிடவில்லை. மேலும் தினமும் பலமுறை வீட்டிற்கு வந்து போலீசார் எங்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள்.

வாழ வழிவகை செய்ய வேண்டும்

இந்த நிலையில் இருந்து எப்படி மீள்வது என்று எங்களுக்கு தெரியவில்லை. நீங்கள் சொல்லும் நாளில் எனது கணவரை நான் உங்கள் கண்முன் அழைத்து வருகிறேன். எந்த போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட சொல்கிறீர்களோ? அங்கு வந்து கையெழுத்திடுவார். நீங்கள் எனது குடும்பம் வாழ வழிவகை செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்