மேலை நாட்டு உணவு முறைக்கு மாறியதால் உடல் உபாதைகளுடன் வாழ்கிறோம்
பழங்கால உணவு பழக்க வழக்கங்களை மறந்த மேலை நாட்டு உணவு முறைக்கு மாறியதால் இன்று உடல் உபாதைகளுடன்வாழ்கிறோம் என வருமுன் காப்போம் திட்ட முகாமில் கலெக்டர் வேதனையுடன் தெரிவித்தார்.
ஆற்காடு
பழங்கால உணவு பழக்க வழக்கங்களை மறந்த மேலை நாட்டு உணவு முறைக்கு மாறியதால் இன்று உடல் உபாதைகளுடன்வாழ்கிறோம் என வருமுன் காப்போம் திட்ட முகாமில் கலெக்டர் வேதனையுடன் தெரிவித்தார்.
வருமுன் காப்போம் முகாம்
ஆற்காடு ஒன்றியம் கே.வேளூர் ஊராட்சியில் உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட வட்டார சுகாதார மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதனை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை பார்வையிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பழங்காலங்களில் இருந்த உணவுப் பழக்க வழக்கங்களை மறந்து மேலை நாடுகளில் உள்ள உணவு பழக்கங்களை பின்பற்றியதன் விளைவாக நாம் இன்று பல உடல் உபாதைகளுடன் வாழ்ந்து வருகிறோம்.
நாம் உணவில் அதிக அளவில் சிறு தானியங்களை பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் சிறு தானியங்களை நாம் உணவில் அதிக அளவில் சேர்த்து கொள்ளும் போது உடல் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும். முன்பெல்லாம் நம் முன்னோர்கள் இனிப்பு சுவைக்காக கருப்பட்டியை மட்டுமே பயன்படுத்தினார்கள். அதனால் எந்தவித நோய் இல்லாமல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனர். நோயின்றி வாழ நாம் வெள்ளை சர்க்கரையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தற்போது உள்ள இளைய தலைமுறைக்கு நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவு பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுங்கள்.
எலும்பு வலுவடையும்
இளம்பிரண்டையை துவையல் செய்து சாப்பிடுவதால் எலும்பு வலுவடைகிறது. ஆனால் நாம் எலும்பிற்காக கால்சியம் மாத்திரைகளை சாப்பிடுகிறோம். இதனால் பக்க விளைவுகளால் பாதிக்கப்படுகிறோம்.
நோய் பாதிப்பு வராமல் தடுக்க இயற்கையாக கிடைக்கும் பழங்கள், சிறு தானியங்கள், கீரைகளை சாப்பிட்டு ஆரோக்கியத்துடன் இருப்போம்
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஆற்காடு தொகுதி ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிமாறன், ஒன்றிய குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், தாசில்தார் சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி நந்தகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.