அ.தி.மு.க.னா நாங்கதான்...! அதெல்லாம் சீரியசா எடுத்துக்காதீங்க- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அ.தி.மு.க. சார்பில் ஆலோசனைக் கூட்டத்தில் இருவர் மட்டுமே கலந்து கொண்டோம். கோவை செல்வராஜ் எந்த கட்சி சார்பில் பங்கேற்றார் என்பதை அவரிடம் கேளுங்கள் என ஜெயக்குமார் கூறினார்.
சென்னை
வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் புதிய நடைமுறை தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது. இப்பணியை திறம்பட மேற்கொள்வது குறித்து, மாநிலத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தோ்தல் ஆணையர் சத்யபிரத சாகு இன்று ஆலோசனை நடத்தினார்.
தேர்தல் ஆணைய ஆலோசனை கூட்டத்துக்கு பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. சார்பில் அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோம். கோவை செல்வராஜ் எந்த கட்சியை சேர்ந்தவர் என தேர்தல் ஆணையத்திடம் தான் கேட்க வேண்டும். அ.தி.மு.க.னா நாங்கதான், அதெல்லாம் சீரியசா எடுத்துக்காதீங்க"
வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. இறந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதில் குளறுபடி உள்ளது.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குளறுபடிகள் இல்லாத வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என கூறி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.