குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

கீழ்வேளூரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. உடைந்த குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2023-06-07 19:00 GMT

கீழ்வேளூரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. உடைந்த குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

குழாயில் உடைப்பு

கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் பதிக்கப்பட்ட ராட்சத குழாய்கள் மூலம் நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி போலீஸ் லைன் பகுதியில் குடிநீர் வடிகால் வாரியத்தால் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்படுகிறது.

இங்கிருந்து ராட்சத குழாய் மூலமாக கீழ்வேளூர், திருக்குவளை வழியாக வேதாரண்யம் வரை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கீழ்வேளூர் ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகளுக்கு இந்த குழாய் மூலமாக குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது.

சுகாதார சீர்கேடு

இந்த நிலையில் கீழ்வேளூர் ரெயில்வே கேட் பகுதி வழியாக செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 2 மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இவ்வாறு வீணாகும் குடிநீர் ரெயில் நிலையம் செல்லும் வழியில் குட்டை போல் தேங்கி நிற்கிறது.

அங்கு தேங்கி உள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

சீரமைக்கப்படுமா?

குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்