வடமதுரை அருகே பொதுக்குழாயில் வீணாகும் குடிநீர்
வடமதுரை அருகே பொதுக்குழாயில் குடிநீர் வீணாகி வருகிறது.
வடமதுரை அருகே சுக்காம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட எஸ்.குரும்பப்பட்டி, களத்தூர், ஒண்டிபொம்மன்பட்டி, யாதவாபுதூர், செக்கனத்துப்பட்டி, சுக்காம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கருவார்பட்டி பிரிவில் இருந்து பூசாரிபட்டி வரை சாலை அமைக்கும் பணிகள் நடந்தது. இதனால் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் இணைப்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது சாலை அமைக்கும் பணிகள் முடிந்த பின்னரும் குடிநீர் குழாய் இணைப்புகள் சரி செய்யப்படவில்லை. இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர்.
இதற்கிடையே எஸ்.குரும்பப்பட்டியில் ஒரேயொரு பொதுக்குழாயில் மட்டும் காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அந்த குழாயிலும் மூடி (டேப்) இல்லாததால் குடிநீர் வீணாகி வருகிறது. எனவே குடிநீர் வீணாவதை தடுக்க குழாயில் மூடி பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் சாலை பணிக்காக துண்டிக்கப்பட்ட மற்ற பகுதிகளில் உடனடியாக காவிரி கூட்டுக்குடிநீர் குழாய் இணைப்பை சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.