தளி
உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டு உள்ளது. அணையில் இருந்து வெளியேறும் தளி கால்வாயை ஆதாரமாகக் கொண்டு சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன் மூலமாக பொதுமக்கள் குடிநீரை பெற்று பயன் அடைந்து வருகின்றனர்.
இந்த சூழலில் குடிநீர் திட்டங்களில் நிலவும் ஒரு சில குளறுபடிகள் காரணமாக கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
தளி- வாளவாடிக்கு இடைப்பட்ட பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. போதிய மழை இல்லாமல் நீராதாரங்கள் தத்தளித்து வருகின்ற தற்போதைய சூழலில் ஒவ்வொரு துளி தண்ணீரையும் பாதுகாத்து சேமித்து பயன்படுத்த வேண்டியது அவசியமாகும். ஏராளமான தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள தென்னை மரங்களுக்கு சென்று வருகிறது.மேலும் உடைப்பு பகுதியில் தேங்கியுள்ள தண்ணீர் குடிநீருடன் கலந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் பொதுமக்கள் தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே தளி-வாளவாடிக்கு இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை அதிகாரிகள் உடனடியாக சீரமைக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.