ரெயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கி நிற்கும் தண்ணீர்-8 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் கிராம மக்கள்

கல்லல் அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் அவற்றை கடப்பதற்காக அப்பகுதி கிராம மக்கள் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2023-04-01 18:45 GMT

காரைக்குடி, 

கல்லல் அருகே ரெயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் அவற்றை கடப்பதற்காக அப்பகுதி கிராம மக்கள் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குளம் போல் தேங்கி நிற்கும் தண்ணீர்

காரைக்குடியை அடுத்த கல்லல் அருகே அரண்மனை சிறுவயல் உள்ளது. இங்கிருந்து முத்துப்பட்டி செல்லும் சாலையின் நடுவில் ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதையானது ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் மழைக்காலங்களில் இந்த ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதால் அதை வெளியே எடுப்பதற்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதுதவிர இந்த ரெயில்வே சுரங்கப்பாதை அருகே கண்மாய் ஒன்று உள்ளதால் அந்த கண்மாயில் இருந்து வரும் கசிவு நீரானது இந்த சுரங்கப்பாதையில் வந்து நிரம்பி வருகிறது.

8 கி.மீ. தூரம் சுற்றி செல்லும் நிலை

இதனால் ஆண்டு முழுவதும் இந்த சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் முத்துப்பட்டி, நெற்புகப்பட்டி, நடராஜபுரம், பணங்குடி, பாகனேரி உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று கல்லல் நகருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை ரெயில்வே அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

இதுகுறித்து கிராம மக்கள் தரப்பில் கூறியதாவது:-

கல்லல் அருகே அரண்மனை சிறுவயலில் இருந்து முத்துப்பட்டி செல்லும் சாலையில் ரெயில்வே நிர்வாகம் சார்பில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் மழைக்காலங்களில் சுரங்கப்பாதை முழுவதும் மூழ்கிவிடும். அப்போது இந்த தண்ணீரை அகற்றுவதற்கு குறைந்தது ஒருவார காலம் வரை ஆகும். மேலும் இந்த சுரங்கப்பாதை உள்ள இடத்தின் அருகே விவசாய தேவைக்காக கண்மாய் ஒன்று உள்ளது.

நிரந்தர தீர்வு

இந்த கண்மாயில் உள்ள தண்ணீர் கசிவு காரணமாக அங்கிருந்து கசிந்து வந்து இந்த சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கி வருகிறது. தற்போது கோடைக்காலமாக இருந்தாலும் கூட கண்மாயில் ஓரளவிற்கு தண்ணீர் உள்ளதால் அந்த தண்ணீர் இ்ந்த சுரங்கப்பாதைக்கு வந்து நிரம்புகிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள், வேலைகளுக்கு செல்பவர்கள் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி சென்று கல்லல் சென்று அதன் பின்னர் காரைக்குடிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதுதவிர இந்த கிராமத்தில் இரவு நேரத்தில் அவசர மருத்துவ சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனத்தை அழைத்தால் இங்கு தேங்கி நிற்கும் இந்த தண்ணீரை காரணம் காட்டி அவர்கள் வரமறுத்து விடுகின்றனர்.எனவே மாவட்ட கலெக்டர் நேரில் இங்கு வந்து பார்வையிட்டு அருகில் கண்மாயில் இருந்து வெளியேறும் கசிவு தண்ணீரை சரி செய்ய பொதுப்பணித்துறையினருக்கு உத்தரவிட வேண்டும். மேலும் ரெயில்வே துறை சார்பில் இதற்கு நிரந்தர தீர்வும் காண வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்