ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது குழாய்கள் உடைந்து குடிநீர் வினியோகம் பாதிப்பு: கிழக்கு கடற்கரை சாலையில் கிராம மக்கள் சாலை மறியல்
கிழக்கு கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியின்போது, குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டதாக கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள மாமல்லபுரம் ஆனவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 1,000 ஏக்கர் நிலங்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பட்டிபுலம், நெம்மேலி, சூளேகிக்காடு, இளந்தோப்பு, சாலவான்குப்பம், திருவிந்தை உள்ளிட்ட இடங்களில் உள்ளது. இதில் சில நூறு ஏக்கர் நிலங்களை தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளதாகவும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீட்கப்பட்ட நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை கணக்கில் கொண்டு வந்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சிக்கு உட்பட்ட சூளேரிக்காடு பகுதியில் சுமார் ரூ.8 கோடி மதிப்பிலான ஆக்கிரமிக்கப்பட்ட 1 ஏக்கர் 52 சென்ட் இடத்தை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன் தலைமையில் அதிகாரிகள் கடந்த 22-ந் தேதி அதிரடியாக மீட்டனர்.
இந்த நிலையில், நெம்மேலி ஊராட்சி சூளேரிக்காடு காட்டுப்பகுதியில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாய்களை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் உடைத்து விட்டதாகவும், இதனால் கடந்த 5 நாட்களாக குடிநீர் வராமல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி சூளேரிக்காடு கிராம மக்கள் கிழக்கு கடற்கரைச்சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணி சீமான், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் அதிகாரிகள் பலர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.