கோழிகளுக்கு தண்ணீரை சுத்திகரிப்பு செய்து வழங்க வேண்டும்
கோழிகளுக்கு தண்ணீரை சுத்திகரிப்பு செய்து வழங்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கோழிகளுக்கு தண்ணீரை சுத்திகரிப்பு செய்து வழங்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 4 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) தலா 3 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 96.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு 6 மற்றும் 8 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும், அதிகபட்சமாக 80 சதவீதமாகவும் இருக்கும்.
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் சமீப காலமாக பெய்து வரும் மழையின் காரணமாக வயல் வரப்புகள் மற்றும் தரிசு நிலங்களில் பல்வேறு வகையான புற்கள் வளர்ந்து உள்ளன. இவற்றை கால்நடைகள் உட்கொள்வதால், வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை மற்றும் தன்மைகளில் மாற்றங்கள் ஏற்பட்டு, அவற்றுக்கு செரிமான கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
தண்ணீரை சுத்திகரிக்க வேண்டும்
அவ்வாறு பாதிக்கப்பட்ட கால்நடைகள் தீவனம் உட்கொள்ளாமல் சோர்வடைந்து, வயிறு உப்புசமாக காணப்படும். இந்த பாதிப்பு கண்ட கால்நடைகளுக்கு முறையான தீவன மேலாண்மை உத்திகளை கையாள்வதன் மூலம் எளிதாக குணப்படுத்தலாம். தீவிரமாக பாதித்த கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவரை அணுகி முறையான சிகிச்சை அளிக்க வேண்டும்.
இதேபோல் அவ்வப்போது பெய்யும் மழையினால் ஆழ்துளை கிணற்றில் உள்ள தண்ணீர் மாசுப்பட்டு நோய் உண்டாகும் நுண்ணுயிரிகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கோழிப்பண்ணையாளர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கோழிகள் குடிக்கும் தண்ணீரை பரிசோதனை செய்து, நுண்ணுயிரிகளின் அளவிற்கு ஏற்ப ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் குளோரின் போன்ற ரசாயனங்கள் மூலம் சுத்திகரிக்க வேண்டும். தற்போதைய தட்பவெப்ப சூழ்நிலையில் கோழிகளுக்கு நச்சு உயிரி மற்றும் நுண்ணுயிரி நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாத்து கொள்ள கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி தீவனங்களில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.