பாசனத்துக்கு கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்; தாசில்தாரிடம், விவசாயிகள் மனு
அம்பையில் பாசனத்துக்கு கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என தாசில்தாரிடம், விவசாயிகள் மனு கொடுத்தனர்.
அம்பை:
அம்பை பகுதியில் உள்ள நதியுண்ணி கால்வாய், வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய் பாசன விவசாயிகள் நேற்று காலையில் அம்பை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள், பாசனத்துக்காக பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அவர்களிடம், தாசில்தார் சுமதி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்துள்ளேன். அரசின் அனுமதி பெற்றவுடன் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து அம்பை நகரசபை தலைவர் கே.கே.சி.பிரபாகரன் தலைமையில் விவசாயிகள் தாசில்தாரிடம் கோரிக்கை மனுவினை கொடுத்து விட்டு சென்றனர்.