3 அணைகளில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
நீலகிரியில் உள்ள அவலாஞ்சி உள்பட 3 அணைகளில் பராமரிப்பு பணிகள் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஊட்டி
நீலகிரியில் உள்ள அவலாஞ்சி உள்பட 3 அணைகளில் பராமரிப்பு பணிகள் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அணை பாதுகாப்பு சட்டம்
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட 2021-ம் ஆண்டு அணை பாதுகாப்பு சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டம் அணைகளை பாதுகாப்பது, பராமரிப்பது, கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளை நோக்கமாக கொண்டது.
இதன்படி தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பாட்டில் உள்ள 17 அணைகளை சீரமைக்க மாநில அரசு ரூ.34.72 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. அதற்கான அரசாணை வெளியானவுடன், சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் காவிரி, பரம்பிக்குளம், ஆழியாறு, வைகை உள்பட 17 அணைகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
அதிகாரிகள் ஆய்வு
இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் போர்த்திமந்து, அவலாஞ்சி, எமரால்டு அணைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதொடர்பாக சென்னை நீர்வளத்துறை அதிகாரிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் 3 அணைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அணைகளில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால், தண்ணீர் அதிக அளவில் வீணானது. இதைத்தொடர்ந்து தற்போது அனைத்து பழைய அணைகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நீலகிரியில் முதல் கட்டமாக 3 அணைகளில் ஆய்வு செய்து உள்ளோம். இதன் முடிவுகளை அறிக்கையாக தயார் செய்து அரசுக்கு அனுப்பப்படும். அதை பொறுத்து அணைக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.