முல்லைப்பெரியாற்றில் இருந்து பி.டி.ஆர்., பெரியார், 18-ம் கால்வாய்களில் தண்ணீர் திறப்பு

முல்லைப்பெரியாற்றில் இருந்து பாசனத்திற்காக பி.டி.ஆர்., பெரியார், 18-ம் கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது.

Update: 2022-09-14 15:52 GMT

முல்லைப்பெரியாற்றில் இருந்து பாசனத்திற்காக பி.டி.ஆர்., பெரியார், 18-ம் கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது.

18-ம் கால்வாய்

உத்தமபாளையம், போடி தாலுகாக்களில் உள்ள கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், டி.மீனாட்சிபுரம், சிந்தலைச்சேரி, சங்கராபுரம், கோடாங்கிபட்டி, பொட்டிபுரம் உள்ளிட்ட பகுதிகள் பாசன வசதி பெறும் வகையில் முல்லைப்பெரியாற்றில் இருந்து 18-ம் கால்வாய் அமைக்கப்பட்டது. இதற்காக கூடலூரை அடுத்து லோயர்கேம்ப் மின் நிலையம் அருகே முல்லைப்பெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு, அதில் இருந்து தண்ணீர் செல்லும் வகையில் இந்த 18-ம் கால்வாய் அமைக்கப்பட்டது.

இந்த கால்வாய் மூலம் உத்தமபாளையம் தாலுகாவில் 10 கிராமங்களில் உள்ள 29 கண்மாய்கள், போடி தாலுகாவில் 3 கிராமங்களில் உள்ள 15 கண்மாய்கள் என மொத்தம் 44 கண்மாய்களில் தண்ணீர் தேக்கப்பட்டு 4 ஆயிரத்து 614 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

தண்ணீர் திறப்பு

இந்தநிலையில் 18-ம் கால்வாயில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து 18-ம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் கலந்துகொண்டு மதகை இயக்கி பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது 18-ம் கால்வாய் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. தற்போது கால்வாய் வழியாக வினாடிக்கு 98 கன அடி வீதம் 30 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மஞ்சளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் சுகுமாரன், கூடலூர் நகராட்சி தலைவர் பத்மாவதி லோகத்துரை, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டியன், தாசில்தார் அர்ச்சுனன், வருவாய் அலுவலர் நாகராஜ், கூடலூர் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி, 18-ம் கால்வாய் விவசாயிகள் சங்க தலைவர் ராமராஜ், நிர்வாக குழு உறுப்பினர் சலேத்து உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக அதிகாரிகளும், விவசாயிகளும் 18-ம் கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீரில் மலர் தூவி வரவேற்றனர்.

பி.டி.ஆர். கால்வாய்

இதேபோல் சின்னமனூர் அருகே முல்லைப்பெரியாற்றில் இருந்து பி.டி.ஆர். மற்றும் பெரியார் கால்வாய்களிலும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் கலந்துகொண்டு, மதகை இயக்கி கால்வாய்கள் வழியாக தண்ணீரை திறந்து வைத்தார். இதில், கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாய சங்க தலைவர் விஜயராஜன், 18-ம் கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் வசந்தன், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டி, தாசில்தார் அர்ச்சுனன், ராமசாமிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் பவுன்ராஜ், சின்னமனூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் அண்ணாதுரை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டு மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துைற அதிகாரிகள் கூறுகையில், பி.டி.ஆர்., பெரியார் கால்வாய்கள் வழியாக தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த கால்வாய்களில் வினாடிக்கு 100 கன அடி வீதம் 100 நாட்கள் தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்