சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை குறைக்க வேண்டும்
மணலூர்பேட்டையில் 19-ந் தேதி ஆற்று திருவிழா: சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை குறைக்க வேண்டும் அமைச்சர் எ.வ.வேலுவிடம் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல். ஏ. வலியுறுத்தல்
திருக்கோவிலூர்
தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான எ.வ.வேலுவிடம் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கோரிக்கை ஒன்றை வலியுறுத்தினார். அதன்படி மணலூர்பேட்டையில் ஆற்று திருவிழா வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் தீர்த்தவாரி நடைபெற்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மேலும் மணலூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் உற்சவ மூர்த்திகளுக்கு தீர்த்தவாரி நடைபெற உள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மட்டுமின்றி திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த நிலையில் தற்போது சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரானது பெண்ணை ஆற்றில் அதிக அளவு ஓடுகிறது. இதை நாளை(அதாவது இன்று) முதல் படிப்படியாக குறைக்க தொடங்கினால் வருகிற 10-ந் தேதிக்குள் தண்ணீரை முழுவதுமாக நிறுத்திவிட்டு திருவிழா முடிந்த பின்னர் 20-ந் தேதியிலிருந்து மீண்டும் தண்ணீரை திறக்கலாம். இதன் மூலம் ஆற்று திருவிழா எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடந்து முடியும். எனவே இதற்கு உரிய அதிகாரிகளுக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார். இதை கேட்டறிந்த அமைச்சர் எ.வ.வேலு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் வக்கீல் பாலாஜி பூபதி உடன் இருந்தார்.