அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் இன்று திறக்கப்படுகிறது.

அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் இன்று திறக்கப்படுகிறது.

Update: 2023-02-07 16:37 GMT

தளி,

அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் இன்று திறக்கப்படுகிறது.

அமராவதி அணை

உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை கொண்டு அமராவதிஅணை கட்டப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது. அதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதிஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது. அத்துடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தண்ணீர் திறப்பு

அணையில் போதுமான அளவு நீர் இருப்பு இருந்து வருகிறது. எனவே சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களுக்கு கூடுதலாக தண்ணீர் வழங்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.அதன் பேரில் அதிகாரிகள் கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பாசன நிலங்களுக்கு தண்ணீர் நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை)தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

அதன்படி திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சார்ந்த 10 அமராவதி பழைய வாய்க்கால்களின் பாசனப் பரப்புகளில் கதிர் நிலையில் உள்ள நெற்பயிர்களுக்கு இன்று முதல் 28-ந் தேதி வரை சம்பா சாகுபடிக்காக காலநீட்டிப்பு செய்து தகுந்த இடைவெளிவிட்டு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

அதேபோன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி பிரதானக் கால்வாய் பாசனப் பரப்புகளில் கதிர் நிலையில் உள்ள நெற்பயிர்களுக்கு இன்று முதல் 28-ந் தேதி வரை சம்பா சாகுபடிக்காக கால நீட்டிப்பு செய்து தகுந்த இடைவெளிவிட்டு அமராவதி ஆற்றின் மதகு வழியாக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

இதனால் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள 47ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்