கம்பத்தில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும்; சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
கம்பத்தில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் தேனிக்கு அடுத்தபடியாக பெரிய நகராட்சியாகவும், தமிழகம்-கேரளாவை இணைக்கும் முக்கிய நகராகவும் கம்பம் விளங்குகிறது. கம்பம் நகருக்கு, சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும், கேரளாவை சேர்ந்த பொதுமக்களும் தங்களது தேவைக்காக வருகை தருகின்றனர். மேலும் சுருளி அருவி, தேக்கடி போன்ற சுற்றுலா தலங்களுக்கும், உலக புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கும் செல்ல முக்கிய வழிப்பாதையாக கம்பம் உள்ளது.
இதனால் கம்பத்தில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படும். ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தை முன்னிட்டு கம்பம் நகராட்சி சார்பில் பொதுமக்கள் கூடும் இடங்களில் தற்காலிக தண்ணீர் பந்தல் அமைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படுவது வழக்கம். இது பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.
இந்தநிலையில் இவ்வாண்டு கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க முன்கூட்டியே நகராட்சி சார்பில் கம்பத்தில் முக்கிய இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கம்பத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஆண்டை போன்று தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும். அதன்படி, நகரின் முக்கிய சந்திப்புகளான கம்பம்மெட்டு பிரிவு, தபால் நிலைய பஸ் நிறுத்தம், அரசு மருத்துவமனை, வாரச்சந்தை, காந்திசிலை, வ.உ.சி.திடல், உழவர்சந்தை, அரசமரம், மாரியம்மன்கோவில், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என்றனர்.