வலங்கைமான் அருகே கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு
வலங்கைமான் அருகே கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக தண்ணீர் வெளியேறுகிறது.
வலங்கைமான்;
வலங்கைமான் அருகே கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக தண்ணீர் வெளியேறுகிறது.
கூட்டுக்குடிநீர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருவைக்காவூர் ஆற்று பகுதியிலிருந்து வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பூமிக்கு அடியில் அகலமான குழாய்கள் பதிக்கப்பட்டு திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை வாய்மேடு வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்தக் குழாய்கள் திருவைக்காவூரிலிருந்து பாபநாசம் மற்றும், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியான, உத்தாணி, கோவிந்தகுடி, வலங்கைமான், ஆலங்குடி, நீடாமங்கலம், மன்னார்குடி நெடுஞ்சாலை ரோட்டின் வழியாக பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
சீரமைக்க கோரிக்கை
மேலும் அதிக அழுத்தம் காரணமாக வலங்கைமானில் பல்வேறு இடங்கள் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிதண்ணீர் வெளியேறுவதுடன் சாலைகளில் சேதத்தை ஏற்படுத்தி ஆங்காங்கே தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடுகிறது. வலங்கைமானை அடுத்த விருப்பாட்சிபுரம் கடைத்தெரு பகுதியில் இதே போன்று குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் பெருகி சாலைகளில் ஓடி வருகிறது.சாலையில் தேங்கும் தண்ணீரால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூட்டுக்குடிநீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்பை விரைவில் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.