மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் தண்ணீர் இன்று முதல் நிறுத்தம்.!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பை இன்று முதல் நிறுத்த நீர்வளத்துறை முடிவுசெய்துள்ளது.
சேலம்,
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது. அதே நேரம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும் தண்ணீர் வரத்து குறைந்தது.
மேட்டூர் அணை கட்டிய 90 ஆண்டு கால வரலாற்றில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அணையின் நீர்மட்டம் இந்த அளவு குறைந்தது இல்லை. கர்நாடக அரசும் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய தண்ணீரை திறந்து விடவில்லை. மேட்டூர் அணைக்கு நீர்வரத்தை விட அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் நீர்மட்டமும் குறைந்து வருகிறது. ஜூன் மாதத்தில் இருந்து இதுவரை அணையில் இருந்து 91 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால், டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பை இன்று முதல் நிறுத்த நீர்வளத்துறை முடிவுசெய்துள்ளது.