வடக்கு பச்சையாறு அணையில் தண்ணீர் திறப்பு; சபாநாயகர் மு.அப்பாவு திறந்து வைத்தார்

வடக்கு பச்சையாறு அணையில் இருந்து சபாநாயகர் அப்பாவு நேற்று பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். இதன்மூலம் 2,028 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

Update: 2022-06-28 20:40 GMT

களக்காடு:

வடக்கு பச்சையாறு அணையில் இருந்து சபாநாயகர் அப்பாவு நேற்று பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். இதன்மூலம் 2,028 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

வடக்கு பச்சையாறு அணை

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வடக்கு பச்சையாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 50 அடி ஆகும். இந்த அணையின் மூலம் களக்காடு, நாங்குநேரி பகுதியில் உள்ள 110 குளங்கள் பயன்பெற்று வருகின்றன.

களக்காடு பகுதியில் பெய்த வடகிழக்கு பருவமழையால் கடந்த டிசம்பர் மாதம் 5-ந்தேதி பச்சையாறு அணை நிரம்பி மறுகால் பாய்ந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 21.25 அடியாக உள்ளது.

தண்ணீர் திறப்பு

இந்த நிலையில் அணையில் இருந்து பயிர் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி சபாநாயகர் அப்பாவு நேற்று அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், 'மடத்துக்கால், பச்சையாறு கால்வாய்களில் வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன்மூலம் 2,028 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்' என்றார்.

நிகழ்ச்சியில், சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷாப், நாங்குநேரி தாசில்தார் இசக்கிப்பாண்டி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மணிகண்டராஜ், உதவி பொறியாளர் பாஸ்கர், களக்காடு யூனியன் தலைவர் இந்திரா ஜார்ஜ்கோசல், நாங்குநேரி ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்